இனிமே தான் ஆட்டமே இருக்கு! மீண்டும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் ராகுல் காந்தி? எப்போது தெரியுமா?
உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்தால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி செல்வது உறுதியாகி உள்ளது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து வரும் திங்கள்கிழமை நாடாளுமன்றத்திற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் உள்ளது என்று லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு, அரசு பங்களாவை காலி செய்ததது உள்ளிட்ட அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறின. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ஆனால், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், சிறை தண்டனையை உடனடியாக நிறுத்துமாறு மனுவில் ராகுல் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்தால் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி செல்வது உறுதியாகி உள்ளது.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்ற நகலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி இன்று வழங்க நேரம் கேட்டுள்ளார். கடிதம் உடனடியாக ஏற்கப்பட்டால் வரும் திங்கட்கிழமையே ராகுல் நாடாளுமன்றம் செல்வார் என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் செல்லும் பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.