“அனைவருமே பிரதமராகனும்னு நெனச்சா எப்படி” பீகார் எதிர்க்கட்சி கூட்டத்தை பங்கம் செய்த பாஜக.. வைரல் வீடியோ
பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்து பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணிகளை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சூழலில் 2024 மக்களவை தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் பங்கேற்றுள்ளன. நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிடிபி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிக் கூட்டம் பீகாரில் துவங்கியது யார் யார் ஆப்சென்ட், பிரசன்ட்?
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. இந்த கூட்டத்தில் பங்கேற்க பாட்னா வந்த ராகுல்காந்தி அன்பினால் மட்டுமே வெறுப்பைத் தோற்கடிக்க முடியும் என்று கூறினார். பாஜகவினர் “வெறுப்பைப் பரப்புகிறார்கள்” என்றும், ஆனால் காங்கிரஸ் மக்களை ஒன்றிணைப்பதற்கும் அன்பை பரப்புவதற்கும் செயல்படுகிறது என்றும் கூறினார்.
மறுபுறம், எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்து பாஜக வீடியோ ஒன்றை வெளியிட்டது. ஹிந்தியில் உள்ள அந்த வீடியோவில் “ ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், சந்திரசேகர் ராவ் என அனைவரும் பிரதமராக வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அனைவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கிறார்கள், இன்னும் கைகோர்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் தன்னைப் பிரதமர் வேட்பாளராகக் கருதுகிறார்கள், ஆனால் அவர்கள் உயர் பதவியை விரும்பவில்லை என்று பகிரங்கமாக கூறுகிறார்கள். அவர்கள் விரும்புவது நரேந்திர மோடியை பதவியில் இருந்து அகற்றுவதுதான். இது போன்ற சந்திப்புகள் மூலம் எதிர்க்கட்சிகள் “ஒற்றுமை” காட்டினாலும், அந்தந்த மாநிலங்களில் ஒருவரையொருவர் விமர்சிக்கிறார்கள்.இந்திய வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள், மற்றும் வித்தைகளை அறிந்தவர். எனவே, நரேந்திர மோடி மட்டுமே அனைவருக்கும் பாரமாக இருக்கிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பல எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) தலைவர் ஜெயந்த் சௌத்ரி, "முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குடும்ப நிகழ்ச்சி" காரணமாக மாநாட்டைத் தவிர்ப்பதாக தெரிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதிக்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் மாயாவதியும் இதில் பங்கேற்கவில்லை.