டெல்லியில் புராரி பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தி்ல் உளவியல் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இறந்தபின் எப்படி உளவியல் பரிசோதனை நடத்தலாம் என்று கேட்கலாம், இறப்பதற்கு முன் அவர்கள் மனநிலை எந்த சூழலில் இருந்தது, தற்கொலைக்கான சாத்தியங்கள் இருந்ததா, அந்த மனநிலையில் அவர்கள் இருந்தார்களா என்பதையும்,இறந்தபின் சூழலையும் ஆய்வு செய்வதே உளவியல் உடற்கூறு ஆய்வாகும்.

டெல்லியின் வடக்குப் பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கடந்த ஜுலை மாதம் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு இறந்திருந்தனர்.

 வீட்டில் வயது முதிர்ந்த பெண் நாராயண் தேவி (வயது 77) தரையில் படுத்தவாறு இறந்திருந்தார். மற்ற 10 பேரும் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டனர். இதில் நாராயண் தேவியின் இரு மகன்கள் பவனேஷ் (வயது 50), லலித் பாட்டியா (45), மகள் பிரதிபா (வயது 57). பவனேஷ் மனைவி சவிதா (வயது 48), சவிதாவின் மகள் மீனு (வயது 23), நிதி (25), துருவ் (15), லலித் பாட்டியாவின் மனைவி டினா (42). இவரின் 15 வயது மகன் சிவம். பிரதிபாவின் மகள் பிரியங்கா (33).

டெல்லி போலீஸார் தீவிர விசாரணையில் யாரும் இந்த 11 பேரைக் கொலைசெய்யவில்லை, தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர். அதிலும், லலித் பாட்டியா என்பவர் தீவிரமான மூடநம்பிக்கைகளைப் பின்பற்றுபவராகவும் பூஜைகள் செய்பவராகவும் இருந்தார் என போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், லலித் பாட்டியா கடந்த 11 ஆண்டுகளாக டைரி எழுதும் பழக்கம் எழுதுபவராக இருந்துள்ளார். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் இறந்துபோன தங்களின் தந்தையின் ஆத்மா தங்கள் வழிநடத்துவதாக லலித் பாட்டியா குடும்ப உறுப்பினர்களை மூளைச்சலவைச் செய்து நம்பவைத்துள்ளார்.

மேலும், வீட்டின் ஒரு பகுதியில் 11 குழாய்கள் மேலும், கீழும் பார்த்தவாறு பதிக்கப்பட்டு இருந்தது, வீட்டுக்குள் சிறிய கோயில் உருவாக்கி அதில் வழிபட்டது போன்றவை லலித் பாட்டியா தீவிர மத, தாந்தரீக நம்பிக்கை உடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட 11 பேரின் உடல்கள் குறித்த உளவியல் பரிசோதனை நடத்த டெல்லி போலீஸார் சிபிஐயிடம் கேட்டுக்கொண்டனர். அந்த ஆய்வுகள் முடிந்து இப்போது அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதில் தற்கொலை செய்து கொண்ட 11 பேரும் தற்கொலை செய்யும் எண்ணம் இல்லாமல் இருந்துள்ளனர. வழக்கம்போல் மதச்சடங்கு என்று நினைத்துதான் தூக்குக்கயிற்றை கழுத்தில் மாட்டியுள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தால், அனைவரும் இறந்துள்ளர். இதை திட்டமிட்டு செய்த தற்கொலை என்று கூற முடியாது இது ஒரு விபத்தாகும். மறுநாள்காலை உணவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளபோது, நாளை பற்றிய எண்ணம் இருப்பவர்களுக்கு எப்படி தற்கொலை எண்ணம் இருக்கும். 11 ேபருக்கும் ஒரே மனநிலை இருக்க வாய்ப்பில்லை. ஆதலால், தற்கொலை செய்து கொண்ட 11 பேருக்கும் இறப்பதற்கு விருப்பமில்லை. இது தற்செயலாக நடந்த விபத்துதான எனத் தெரிவித்துள்ளது.

இந்த தற்கொலை தொடர்பாக பாட்டியாவின் உறவினர்கள், நண்பர்கள் என 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்தனர்.