கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. முண்டக்கை பகுதியில் சத்தம் கேட்டதாகவும், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Heavy Rain Wayanad landslide : கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அச்சமான நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில், கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் இயற்கை சீற்றத்தால் சிதைந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 30தேதியன்று அன்று கேரளாவின் வயநாடு மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலை, புஞ்சிரிமட்டம் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 318 பேர் உயிரிழந்தனர், 397 பேர் காயமடைந்தனர், மற்றும் 118 பேர் காணவில்லை என்று தகவல்கள் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான குழந்தைகள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது.

வயநாட்டில் நிலச்சரிவில் மண்ணில் புதைந்த மக்கள்

இந்த நிலையில் மீண்டும் வயநாட்டில் கன மழை கொட்டி வருகிறது. வயநாட்டில் கனமழை காரணமாக முண்டக்கை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பெரும் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கனமழையால் புன்னா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கிராம சாலைகளில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆற்றில் சேற்றுடன் கலங்கிய நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண்சரிவு ஏற்பட்டதா என அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். முண்டக்கை மலை மற்றும் வனப்பகுதியில் 10 செ.மீட்டர் அளவிற்கு மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மீட்பு பணிக்காக தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மீண்டும் கனமழை- நிலச்சரிவு அபாயம்

இதே போல சூரல்மர பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புஞ்சிரிமட்டம் மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். தற்போது நிலச்சரிவு ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மண் அரிப்பு ஏற்பட்டு சேறு கலந்த நீர் ஆற்றில் ஓடுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சூரல்மலை மற்றும் முண்டக்கையில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கனமழை பெய்ததால், நிலச்சரிவு ஏற்படவில்லை என்று அங்கிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களும் தெரிவித்தனர். இதனிடையே கடந்த முறை ஏற்பட்ட நிலச்சரிவின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் உடைத்து செல்லப்பட்டது. இதற்கு மாற்றாக இந்திய ராணுவத்தின் சார்பாக இரும்பிலான பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலப்பகுதயில் காற்றாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நிலச்சரிவு அபாயம்- உள்ளே நுழைய தடை

இதனிடையே வயநாட்டின் புஞ்சிரிமட்டத்திற்கு மேலுள்ள வனப்பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவுகளின் மண் மற்றும் தேங்கியிருந்த கழிவுகள் மழைநீருடன் கலந்து சிவப்பு நிறமாக பாய்ந்து செல்கிறது. மலைப்பகுதியில் மண் அரிப்பு முழுமையாக நிற்கும் வரை இது தொடரும் என பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். எனவே வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் இந்த 'செல்லா பகுதி'க்குள் நுழைய வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.