” குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே அவர்களின் நோக்கம்” எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி..
” குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கிண்டல் செய்தார். மேலும் நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்தே ஊழல் மற்றும் வாரிசு கட்சிகள் நாட்டிற்கு அநீதி இழைத்துவிட்டன என்று தெரிவித்தார். "முதலில் குடும்பம், தேசம் எல்லாம் ஒன்றுமில்லை" என்பதே அவர்களின் குறிக்கோள் என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போது சில கட்சிகள் தங்கள் கடையை திறந்துள்ளன. இந்த கட்சிகள் இரண்டு பொருட்களை தங்கள் கடைகளில் விற்கின்றன: ஒன்று "சாதிவெறி மற்றொன்று ஊழல். அவர்கள் தற்போது பெங்களூருவில் கூடியுள்ளனர். அரசியல் தலைவர்களை ஒன்றாக பார்க்கும் போது, ஒன்றுதான் மக்கள் மனதில் தோன்றும். லட்சக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் ஒன்றாக இருக்கின்றனர் என்பது தான் மக்களுக்கு தோன்றும்.” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசிய அவர், "2024க்கு 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன" என்று தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வெளிப்படையாகத் விமர்சித்த மோடி, “ இந்த சந்திப்பின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கோடிக்கணக்கில் ஊழல் செய்ததற்காக ஜாமீனில் வெளியே வந்தால், அவர்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படுகிறார்கள். மொத்தக் குடும்பமும் ஜாமீனில் வெளியில் இருந்தால், அவர்களுக்குத்தான் அதிக மரியாதை... ஒரு சமூகத்தை யாராவது அவமதித்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால், அவருக்கு மரியாதை கிடைக்கும்...” என்று விமர்சித்தார்.
குடும்பத்தால், குடும்பத்திற்காக அரசியல் செய்வததே அவர்களின் நோக்கம் என்றும் தேசத்தின் வளர்ச்சியை நிறுத்துவதும் அவர்களுக்கு எதிரான விசாரணையை நிறுத்துவதும் தான் அவர்களின் பொதுவான நோக்கம என்றும் மோடி தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. மறுபுறம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 38 கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நடைபெறுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'26/11 தாக்குதல் மீண்டும் நடக்கும்.': மும்பை காவல்துறைக்கு வந்த மற்றொரு மிரட்டல் அழைப்பு..