விமானநிலையங்கள், ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் அதிகமான மக்கள் கூட்டம் இருக்கும் போது ரசாயன ஆயுதங்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் திடீர் எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, ரெயில், விமானம், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனைக்கு உள்ளாக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், விமானப்பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் உடமைகளில் ஏதேச்சும் கொடிய நச்சு வாயுக்களை பரப்பும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும், விமானப் போக்குவரத்து துறை மற்றும் மற்ற துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், “ மக்கள் கூடும் இடங்களில் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பை பலப்படுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்றில் ரசாயன தாக்குதலுக்கு தீவிரவாதிகள் முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சியை கடைசி நேரத்தில் அந்தநாட்டு பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்கள் மூலம் தங்கள் தாக்குதல் யுத்தியை திருப்பியுள்ளனர். அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கும் ரசாயனப் பவுடர், பூச்சி கொல்லிகள், ஆசிட், நீர், ஆகியவற்றை மக்கள் உண்ணும் உணவு, குடிக்கும் குடிநீர், குளிர்பானங்கள், ஆகியவற்றில் கலந்து தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அதிலும், பஸ், ரெயில், விமானம் போன்றவை செயல்பாட்டில் இருக்கும் போது, விஷவாயுக்களை உண்டாக்கினால், பெரும் சேத்ததை விளைவிக்கும் என்பதால், அதை செயல்படுத்த தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் . ஆதலால், விமான நிலையத்துக்கு பாதுகாப்புஅளிக்கும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், துணை ராணுவப்படையினர், மாநில போலீசார் தீவிர விழிப்புணர்வுடன் செயலாற்ற உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.