கேரளாவில் கோவில் ஊழியருக்கு லாட்டரி மூலம் 5 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கேரளா மாநிலம், தளிபரம்பு பகுதியைச் சேர்ந்த கோவில் ஊழியர் அஜிதன். வயது 61 வயதான இவருக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

கேரள அரசு நடத்தும் லாட்டரியில் அடிக்கடி சீட்டு எடுப்பது வழக்கம். 2011-ம் ஆண்டு இவருக்கு கேரள லாட்டரியில் ரூ.40 லட்சம் பணமும், 50 பவுன் நகையும் பரிசாக கிடைத்தது. கேரள லாட்டரி மூலம் கிடைத்த பரிசு பணம் மூலம் குடும்பத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற அஜிதன், அதன் பிறகும் கோவில் ஊழியர் வேலையை விடவில்லை. தொடர்ந்து பணியாற்றி வந்த அவர், லாட்டரி எடுப்பதையும் நிறுத்தவில்லை.

இந்த நிலையில் கேரள லாட்டரி நடத்திய மழைக்கால லாட்டரி குலுக்கலில் அஜிதனுக்கு முதல் பரிசான ரூ.5 கோடி கிடைத்துள்ளது. இதனை அவர், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்தார். கேரள லாட்டரியில் 2011-ல் பரிசு பெற்ற அஜிதனுக்கு அடுத்த 8 ஆண்டில் மீண்டும் அதிர்ஷ்டம் அடித்து அவர், கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.

அஜிதனுக்கு சவிதா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் அதுல் சவுதி அரேபியாவில் என்ஜினீயராக உள்ளார். மகள் அஞ்சனா பி.டெக். படித்து வருகிறார்.கேரளாவில் இதுதான் இப்போது டிரன்டிங்காகி வருகிறது.