The Supreme Court in the case of bribery in the names of judges Special petition requested to dismiss

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெற்ற வழக்கில், சிறப்பு விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

நீதிபதிகள் பெயரில்

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, நீபதிகள் பெயரில் பெருமளவிலான தொகையை லஞ்சமாகப் பெற்றதாக, சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. போலீசார் ஒடிசா மாநில ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியான இஷ்ரத் மஸ்ரூர் குத்தூஸியை கைது செய்தனர். அவர் உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான துஷ்யந்த் தவே, வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

அவசர வழக்காக..

அதில், ‘‘உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி (தீபக் மிஸ்ரா) தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் வழக்குதான் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இந்த வழக்கை அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கக் கூடாது’’ என்று, துஷ்யந்த் தவே கோரியிருந்தார்.

இதனை, அவசர வழக்காக ஏற்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

அரசியல் சாசன அமர்வு

மேலும், நீதிபதிகளின் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் காமினி ஜெய்ஸ்வால் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

சில நாள்களுக்கு முன்பு இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

அதிரடி ரத்து

ஆனால், அடுத்த நாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த உத்தரவை ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர வேறு நீதிபதிகள் யாரும் அரசியல்சாசன அமர்வுக்கு ஒரு வழக்கை மாற்ற முடியாது என்று அப்போது அந்த அமர்வு கூறியது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்காததால் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மனு தள்ளுபடி

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெற்ற வழக்கு பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரும் காமினி ஜெய்ஸ்வாலின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் எந்த ஒரு நீதிபதிக்கு எதிராகவும் இந்த வழக்கு தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

-----

(பாக்ஸ்)

பிரசாந்த் பூஷன் மீது ‘அவமதிப்பு

நடவடிக்கை’ எடுக்காத நீதிபதிகள்

சிறப்பு விசாரணை குழு அமைக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘‘இந்த சர்ச்சையின் மூலம் நீதிமன்றத்துக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டனர். முதல் தகவல் அறிக்கையில் எந்த ஒரு நீதிபதிக்கு எதிராகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை’‘ என்று கூறினார்கள்.

‘‘முதலில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருக்கும்போதே, ‘ஆதாய நோக்கத்தில்’ 2-வது மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உரியது’’ என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும் இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான பிரபல வக்கீலான பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை. நல்லெண்ணம் வெற்றி பெறும் என்று நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘‘மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பு உரிய முறையில் உண்மைகள் கண்டறியப்படவில்லை’’ என குற்றம் சாட்டிய அவர்கள் இந்த பெரிய நிறுவனத்தின் (உச்ச நீதிமன்றம்) நலனுக்காக நாம் ஒன்றுபடுவோம் ’’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.