அனைத்து நீதிமன்றங்களின் விசாரணை நடவடிக்கைகளும் வீடியோ-ஆடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதற்காக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மேற்கண்ட உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் மேலும் கூறும்போது, ‘‘மற்ற நாடுகளில் உள்ள அரசியல் சாசன நீதிமன்றங்களில் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் நடைமுறையில் உள்ளன. இது நீதிபதிகளின் அந்தரங்க விஷயம் சம்பந்தப்பட்டது இல்லை.

அமெரிக்காவில் நீதிமன்ற நடவடிக்கைகள் யூ டியூப்களிலும் வெளியாவதாக’’ குறிப்பிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல் மனிந்தர்சிங், ‘‘உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை பதிவு செய்யக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்ற தகவல் தொழில் நுட்ப குழு (இ-கமிட்டி) உத்தரவிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘அது நிர்வாகம் தொடர்பான உத்தரவுதான். நாங்கள் சொல்லும் நீதிமன்ற பதிவு என்பது, நடைமுறைகளை பாதிக்காத வகையில் அனைத்து நிகழ்வுகளையும் பதவி செய்வதாகும்’’ என்றனர்.

குரல் பதிவுடன் கூடிய சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவது குறித்து, தங்களுக்கு தேவை என்றால் அந்தந்த உயர் நீதிமன்றங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சி.சி.டி.வி. கேமராக்கள் ெபாருத்துவது குறித்து உயர் நீதிமன்றங்கள் அனுப்பிய அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, அனைத்து மாநிலங்களிலும் தலா இரு மாவட்ட நீதிமன்றங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக வீடியோ பதிவு (குரல் பதிவு இல்லாத) செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய விசாரணையின்போது வீடியோ பதிவு மட்டுமின்றி, ஆடியோ (குரல்) பதிவும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சாத்தியக்கூறு பற்றி மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.