பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற தேசிய விருதுகளைப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ அடைமொழியாகப் பயன்படுத்தக் கூடாது என பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவை பட்டங்கள் அல்ல, கௌரவ விருதுகளே என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
"பத்மஸ்ரீ" மற்றும் "பாரத ரத்னா" போன்ற விருதுகளைப் பெயருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ அடைமொழியாகப் பயன்படுத்தக் கூடாது என்று பம்பாய் உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
புனேவைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்றின் கூட்டம் தொடர்பான வழக்கை நீதிபதி சோமசேகர் சுந்தரேசன் விசாரித்து வந்தார். அந்த மனுவில், மருத்துவத் துறையில் சாதனை படைத்ததற்காக 2004-ல் விருது பெற்ற டாக்டர் ஷரத் எம் ஹர்திகர் என்பவரின் பெயர், "பத்மஸ்ரீ டாக்டர் ஷரத் எம் ஹர்திகர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை கவனித்த நீதிபதி, பெயருக்கு முன்னால் இப்படி விருதுகளைச் சேர்ப்பது சட்டப்படி தவறு என்று சுட்டிக்காட்டினார்.
விருதுகள் பட்டங்கள் அல்ல
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உயர் நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கல்வி மற்றும் ராணுவம் சார்ந்த பட்டங்களைத் தவிர மற்ற பட்டங்கள் (Titles) ஒழிக்கப்பட்டுவிட்டன என நீதிமன்றம் கூறியது.
பாரத ரத்னா, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை கௌரவ விருதுகளே தவிர, அவை பட்டங்கள் கிடையாது.
யாராவது இந்த விருதுகளைத் தங்கள் பெயருக்கு முன்னொட்டாகவோ (Prefix) அல்லது பின்னொட்டாகவோ (Suffix) பயன்படுத்தினால், விதிமுறை 10-ன் படி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது திரும்பப் பெறப்படலாம்.
நீதிமன்றத்தின் உத்தரவு
"விருதுகளைப் பட்டங்களாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். நீதிமன்ற நடைமுறைகளிலும் இது சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்," என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அந்த அறக்கட்டளை வழக்கின் தேதியில் இருந்த பிழையைத் திருத்திக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


