குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கர்நாடகாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் வாக்‌ஷீர்' நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து வரலாறு படைத்துள்ளார். அப்துல் கலாமிற்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்தில் இருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டு புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Scroll to load tweet…

ஐ.என்.எஸ். வாக்‌ஷீர்

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கல்வாரி ரகத்தைச் சேர்ந்த 'ஐஎன்எஸ் வாக்‌ஷீர்' (INS Vaghsheer) நீர்மூழ்கிக் கப்பலில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் இந்தப் பயணத்தின் போது குடியரசுத் தலைவருடன் இருந்தனர்.

இதற்கு முன்னதாக, கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்திருந்தார். சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திரௌபதி முர்மு இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பயணத்தின் நோக்கம்

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கார்வார் தளம், நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு மையங்களில் ஒன்றாகும்.

இந்தப் பயணத்தின் மூலம் நாட்டின் கடல்சார் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் கடற்படையின் செயல்பாட்டுத் திறனை குடியரசுத் தலைவர் நேரடியாகப் பார்வையிட்டார். இது இந்திய பாதுகாப்புத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் தன்னிறைவு மீதான நம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நான்கு நாள் சுற்றுப்பயணம்

கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவர் சென்றுள்ளார்.

கார்வாரில் கடற்படையின் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த பிறகு, ஜார்க்கண்ட் செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜாம்ஷெட்பூரில் உள்ள NIT கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

'ஒல் சிக்கி' (Ol Chiki) எழுத்துமுறையின் நூற்றாண்டு விழாவிலும், கும்லா பகுதியில் நடைபெறும் பழங்குடியின கலாச்சார விழாவிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

சமீபத்தில் ரஃபேல் மற்றும் சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானங்களிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் செய்திருந்தார். தற்போது ஆழ்கடலிலும் பயணம் செய்திருப்பது ராணுவ வீரர்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.