கேரள மாநிலத்தில் மலையாள மக்களின் கடைசி மாதமான ராமாயண மாதம் நேற்று தொடங்கியது. கோவில்கள் முதல் வீடுகள் வரை அனைத்திலும் ராமாயணத்தின் கதைகள் படிக்கப்படும்.

கேரள மக்களின் , மலையாளக் காலண்டர்படி நேற்று ‘கர்கிடகம்’ எனும் மாதம் பிறந்தது. இது மலையாள மாதங்களில் கடைசி மாதமாகும். ஆகஸ்ட் மாதத்தில் புத்தாண்டான ஓணம் பிறக்க உள்ளது.

இந்த ‘கர்கிடகம்’ மாதத்தில் மலையாளக் கவிஞர் துஞ்சத் ராமானுஜன்எழுத்தச்சன் எழுதிய ‘ஆத்யத்மா ரமாயண’ கதையை அடுத்த 30 நாட்களுக்கு வயதில் மூத்தவர்கள் படிப்பார்கள். இதற்காக மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள கோவில்கள், கலாச்சார அமைப்புகள் சிறப்பு பூஜைகளையும், ராமாயண கதைபிடிப்பு நிகழ்ச்சியையும் நடத்துவார்கள்.

மலையாள மக்களின் வண்ணமிகு மாதமான ‘ஓணம்’ பிறப்பதற்கு முதல் மாதமாக ‘கர்கிடகம்’ மாதம் இருப்பதால், இதை உற்சாகத்துடன் வரவேற்பர். தமிழகத்தில் ஆடிமாத்தில் அம்மன் கோவில்களில் கூல் ஊற்றுவதுபோல், கேரள மாநிலத்திலும் ‘கர்கிடக கஞ்சி’ என்று வழங்குவார்கள். அரிசி, ஆயுர்வேத, மூலிகை மருந்துகள் உள்ளிட்டவை சேர்த்து இது தயாரிக்கப்படும்.

மேலும், இந்த மாதத்தில் கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் உள்ள ராமர்,லட்சுமனர், பரதன், சத்ருகன் கோயில்களுக்கு சென்று மக்கள் வழிபாடு நடத்துவார்கள்.

அதுமட்டுமல்லாமல் கேரள மக்களின் முக்கிய நிகழ்ச்சியான ‘ ‘நலம்பலம் தரிசனம்’, யானைகளுக்கு உணவு வழங்கும் ‘ஆனை ஊட்டு’ நிகழ்ச்சிகளும் இந்த மாதத்தில் நடக்கும்.இந்த நிகழ்ச்சி திருச்சூரில் உள்ள வடக்கும்நாதன்கோவியிலில் சிறப்பாக நடந்தேறும்.

வடக்கும்நாதன் கோவிலின் தெற்கு கோபுரத்தில் யானைகளை வரிசையாக நிற்கவைத்து சந்தனம், குங்குமம் பூசி அவற்றுக்கு கரும்பு, அரிசி, நெய், தேங்காய், வெல்லம் மற்றும் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படும்.