The state of Rajasthan has issued orders to celebrate valentines day as the day to worship parents
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை, பெற்றோர் தினமாக கொண்டாட ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பெற்றோர் தினம் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று, வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்களைப் பரிமாறிக் கொள்வார்கள். காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களைக் கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வார்கள். மேற்கத்திய கலாச்சாரமாக காதலர் தினம் இருந்தாலும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் மேற்கத்திய கலாச்சாரம் புகுத்தப்பட்டுள்ளதாக பல இந்து அமைப்புகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியை தாய் - தந்தையரை வணங்கும் தினமாக கொண்டாட ராஜஸ்தான் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2019 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் பிப்ரவரி 14 ஆம் தேதி பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கல்வித் துறையில் பின்பற்றப்படும் காலண்டரில் இதைச் சேர்க்க வேண்டும் என்றும், அன்றைய தினம் பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்தி கௌரவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய கலாச்சாரத்தைக் காக்க முடியும் என ராஜஸ்தான் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
