குஜராத் மாநிலத்தை 22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி செய்தும் அங்கு கல்வித்தரம் முன்னேறவில்லை. கல்விக்கு குறைவாகவே அரசு செலவுசெய்யப்படுகிறது, இப்படி இருந்தால் புதிய இந்தியா கனவு நனவாகுமா என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.

 

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக இம்மாதம் 9 மற்றும் 14ந்தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா தலைவர்களும், பிரதமர் மோடியும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தியும், தீவிரசுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தை கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனதா அரசில் மாநிலத்தின் கல்வித்தரம் நாட்டில் 26-வது இடத்தி்ல் இருக்கிறது எனக் கூறி ராகுல் காந்தி டுவிட்ரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது-

நாட்டிலேயே குஜராத் மாநிலம் கல்வியின் தரத்தில் 26-வது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தின் கல்விக்கு அரசு செலவு செய்தும் ஏன் பின்தங்குகிறது?. இந்த மாநிலத்தின் இளைஞர்கள் என் தவறு செய்தார்கள் என்று குறைவாக மாநில அரசு கல்விக்கு செலவிடுகிறது.

அரசுப் பள்ளிகளில் கூட கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. தனியார் பள்ளிக்கூடங்களும், கல்வி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தி மாணவர்களுக்கு கல்வி என்பதை கடினமாக்கிவிட்டார்கள். இந்த வழியில் சென்றால், உங்களின் புதிய இந்தியா கனவு எப்படி நனவாகும் மோடி. இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சனமா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.