ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அளித்துள்ள பரிந்துரைகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மத்திய அரசு அமைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவானது, 18,626 பக்கங்களை கொண்ட விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று நேரில் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என அந்த குழு பரிந்துரைத்துள்ளது. “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குழு ஒருமனதாகக் கருதுகிறது.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பித்தன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பிற்கு, நாடு முழுவதிலுமிருந்து 21,558 பதில்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், பன்னிரண்டு பெரிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற சட்ட வல்லுநர்கள் இந்த குழுவால் நேரில் அழைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. சி.ஐ.ஐ., ஃபிக்கி, அசோசெம் போன்ற உயர்மட்ட வணிக அமைப்புகள் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் பல தேர்தல்களின் பொருளாதார விளைவுகள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதனடிப்படையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆய்வுக் குழுவானது தங்களது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் குழு பரிந்துரை செய்துள்ளது. 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறுவதற்குள் தொங்கு சட்டப்பேரவை அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அரசு கவிழ்ந்தால், மீதமுள்ள காலத்திற்கு மட்டும் புதிய தேர்தலை நடத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து தேர்வு: அதிர் ரஞ்சன் சவுத்ரி!
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியலைப்பில் திருத்தம் செய்ய தேவையில்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு மட்டுமே அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் முதல் முறையாக 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும். எடுத்துக்காட்டாக, 2029இல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தத் திட்டமிடப்பட்டால், வருகிற 2026, 2027 மற்றும் 2028ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள உள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளின் பதவிக்காலம் 2029 வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.