புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து தேர்வு: அதிர் ரஞ்சன் சவுத்ரி!

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்

Gyanesh Kumar and Sukhbir Singh Sandhu Appointed As Election Commissioners says Adhir Ranjan Chowdhury smp

தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினிமா செய்துள்ளார். அவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் ஆணையர் குழுவில் மூன்று பேர் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.

தற்போது, அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவியிடங்களுக்கு புதிய ஆணையர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அக்கூட்டம் இன்றைய தினத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதில், புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வானது ஒருதலைப்பட்சமாக நடைபெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர்கள் இருவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். 1998ஆம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேஷ் குமார், அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றியுள்ளார். பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சிங் சந்து 1998ஆம் ஆண்டு கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார். உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவராகவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தேர்தல் ஆணையர்களின் தேர்வானது புதிய சட்டத்தின்படி நடைபெற்றுள்ளது. புதிய சட்டத்தின்படி, பிரதமர், பிரதமர் நியமிக்கும் அமைச்சர், மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும். தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் மூன்று உறுப்பினர் குழுவில் முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இருந்தார். ஆனால், தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு புதிதாக சட்டம் இயற்றியது. அதன்படி, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருப்பர்.

தாமரையே விடை: மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜக போஸ்டர்!

இந்த நடைமுறையின்படி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய உள்துறை செயலர், மத்திய பணியாளர் துறை செயலர் உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை குழு ஆலோசனை நடத்தி, 2 பதவிகளுக்கும் தலா 5 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இதையடுத்து, பிரதமர், மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட 3 பேர் குழுவானது பரிந்துரை செய்யப்பட்ட 5 பேரில் இருவரது பெயரை இறுதி செய்யும். பின்னர், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் புதிய சட்டத்தின் கீழ் தற்பொழுது காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களாக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios