Vasundhara Raje's Presence at PM Modi Rally: மீண்டும் வசுந்தரராஜே சிந்தியா; கர்நாடகா தேர்தல் கொடுத்த பாடமா?
ராஜஸ்தான் மாநிலம் நடப்பாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் தற்போது ஏறக்குறைய பிரச்சாரத்தை முடுக்கி விட்டு இருக்கிறார் என்றே கூறலாம்.
எந்த மாநிலத்தில் தேர்தல் வந்தாலும் பாஜக திட்டமிட்டு செயல்படுவதில் கில்லாடி. மாநிலத்தின் ஓவ்வொரு நாடி நரம்பையும் அலசி ஆராய்ந்து தேர்தலில் போட்டியிடுவது என்பது கைவந்த கலை. இது மட்டுமில்லை. பாஜக தொண்டர்களை ஒவ்வொரு வீட்டுக்கும் அனுப்பி பாஜகவின் சாதனைகளை விளக்குகிறது.
என்னதான் மத்திய பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வந்தாலும், மாநிலத்தில் இருக்கும் பிரச்சனைகள், அவர்களுக்கான தேவைகள், எந்த தலைமையை மாநில மக்கள் விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்வதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற பாடத்தை கர்நாடகா தேர்தல் கற்பித்துக் கொடுத்துள்ளது.
கர்நாடகாவைத் தொடர்ந்து ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் வேலைகளில் தற்போது பாஜக இறங்கியுள்ளது. புதன் கிழமை (நேற்று) பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று இருந்தார். அஜ்மீரில் பேரணியில் கலந்து கொண்டார். அவருடன் மேடையில் அமர்ந்து இருந்தவர் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாத வல்லமை படைத்த தலைவர் என்று கூறலாம். இன்று நேற்றல்ல. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இருந்து தனக்கு என்று தனி முத்திரை பதித்துக் கொண்டவர். மேலும் இவரது தாயும் தீவிர பாஜக ஆதரவாளர் மட்டுமின்றி அந்தக் கட்சியின் சார்பில் மத்தியப் பிரதேசத்தின் குணா லோக்சபா தொகுதியில் 1957ல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்டு வென்றவர். ஜனசங்கம் தான் இவருக்கு அடித்தளம். இவர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துள்ளார்.
இவரது மகள்தான் வசுந்தராராஜே சிந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர். நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக ராஜஸ்தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் அல்லது ஒதுக்கப்பட்டார் என்று வைத்துக் கொள்ளலாம். தற்போது மீண்டும் அவருக்கு பாஜக முக்கியத்தும் கொடுத்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!
இதற்கு முன்பு பலமுறை பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் நாத்வாரா, டவ்சா, பில்வாரா ஆகிய இடங்களுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது வசுந்தராராஜே சிந்தியா பிரதமருடன் காணப்படவில்லை. நேற்று அஜ்மீரில் பிரதமர் மோடி இருக்கும் மேடையில் வசுந்த்ரராஜே சிந்தியா தோன்றுவார் என்று யாரும் நினைக்கவில்லை. பேரணியில் மேடையில் தோன்றினார், ஆனால், பேசவில்லை. பிரதமருக்கு அருகே அவருக்கு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பாஜக தலைவர் ராஜேந்திர ரதோரின் இருக்கையும் அவருக்கு அடுத்தே போடப்பட்டு இருந்தது. மக்களைப் பார்த்து பிரதமர் மோடி கையசைக்கையில் வசுந்த்ரராஜேவும் அசைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியாவை பிரித்துப் பார்க்க முடியாது என்பது சாமானிய பாஜக தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது. சமீபத்தில் கடந்த ஆட்சியில் நடந்த வசுந்தரராஜே சிந்தியாவின் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி கொடுத்து இருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைமையும் மவுனம் சாதித்தது. அசோக் கெலாட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம் : HistoryTv 18-ல் வெளியாகும் சிறப்பு ஆவணப்படம்..
ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்திதான் தேர்தலை பாஜக சந்திக்க இருக்கிறது. ஆனாலும், மாநிலத் தலைவர்களும் முக்கியம் என்பதை கர்நாடகா தேர்தலுக்குப் பின்னர் பாஜக உணர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வேட்பாளர் இவராகத்தான் இருப்பார் என்று யாரையும் உத்தேசமாகக் கூட கூறப்படவில்லை. இதில் இருந்தே மீண்டும் பிரதமர் மோடிதான் அங்கும் முன்னிறுத்தப்படுவார் என்பது தெளிவாகிறது.
கடந்த தேர்தலில் ''ஊழல் வசுந்தரராஜே சிந்தியாவை'' அகற்ற வேண்டும்தான் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது. மோடியை பிரதானப்படுத்தவில்லை. ஆனால், இந்த முறை முற்றிலும் மாறி இருக்கிறது என்றாலும், வசுந்தரராஜே சிந்தியா தனது செல்வாக்கைக் கொண்டு மீண்டும் முதல்வராகலாம் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் எடியூரப்பா போன்றவர்களை தேர்தலின்போது கட்சி ஓரம் கட்டியது. இதுவும் பாஜகவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. மாநிலத்தில் எப்படி பாஜகவை எதிர்கொள்வது என்ற வித்தையை கர்நாடகா காங்கிரசில் இருந்து முதல்வர் அசோக் கெலாட் கற்றுக் கொண்டு வருகிறார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அசோக் கெலாட் அறிவித்து இருக்கிறார். தற்போதே கட்சியினரை வசுந்தராராஜே சிந்தியா சந்தித்து வருகிறார்.