ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் அனுமதி அளித்துள்ளார். 

ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம்- குடியரசு தலைவர் ஒப்புதல்

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி அளித்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 197(1) (தற்போது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவு 218) இன் கீழ் குடியரசுத் தலைவர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத் துறை (ஈடி) விசாரணையைத் தொடங்கியது. 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், குரூப் டி பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கு லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டதாக எஃப்ஐஆர் குற்றம் சாட்டுகிறது.

லாலு பிரசாத் மீது ஊழல் புகார்

ரயில்வேயில் வேலை தேடுபவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரால் இந்த சொத்துக்கள் மாற்றப்பட்டு, பின்னர் லாலு யாதவின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேலைக்கு லஞ்சமாக நிலத்தை மாற்ற வேண்டும் என்று வேலை வாயப்பை பெறும் நபர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரிடம் கூறப்பட்டது. இந்த நிலங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தில் சிபிஐ மூன்று குற்றப்பத்திரிகைகளையும், துணை குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது. பிஎம்எல்ஏ, 2002 இன் விதிகளின் கீழ், அமித் கத்யால் மற்றும் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களான ரப்ரி தேவி, மிஷா பாரதி, ஹேமா யாதவ் மற்றும் இரண்டு நிறுவனங்கள் ஏ கே இன்போசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ பி எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் (பிஎம்எல்ஏ), புது தில்லியில் 2024 ஜனவரி 8 அன்று அமலாக்கத்துறை தனது வழக்கு தொடர்பு குற்றச்சாட்டை (பிசி) தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுக்களை ஏற்ற நீதிமன்றம்

மேலும், லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் பிறருக்கு எதிரான துணை வழக்கு தொடர்பு குற்றச்சாட்டு 2024 ஆகஸ்ட் 6 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.