லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் நெருக்கடி; கால்நடை ஊழலில் உச்சநீதிமன்றத்தை அணுகியது சிபிஐ; விரைவில் விசாரணை!!
கால்நடை ஊழல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கி இருந்த ஜாமீனை ரத்து செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த ஜாமீனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. சிபிஐ தனது மனுவில் லாலு பிரசாத் யாதவுக்கு அளித்து இருக்கும் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கால்நடை ஊழல் வழக்கில் தோரந்தோ கருவூலம் வழக்கில் குற்றவாளி என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது.
லாலு பிரசாத் யாதவ் பீகார் முதலமைச்சராக இருந்தபோது கால்நடைகளுக்கான தீவனம் என்ற பெயரில் போலியாக பல்வேறு அரசு கருவூலங்களில் இருந்து ரூ.950 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக பணம் எடுக்கப்பட்டதை கால்நடை தீவன ஊழல் என்று கூறப்படுகிறது.
டோராண்டா கருவூல வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேரில் 24 பேர் விடுவிக்கப்பட்டனர். கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்ட 46 பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 74 வயதான லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்டில் உள்ள தும்கா, தியோகர் மற்றும் சாய்பாசா கருவூலங்கள் தொடர்பான நான்கு வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நில மோசடி:
லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரும் நில மோசடி தொடர்பான விசாரணையில் சிக்கியுள்ளனர். இம்மாத தொடக்கத்தில், இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவுடன் தொடர்புடைய பலரின் 6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ராப்ரி தேவி, மிஷா பார்தி (லாலு யாதவின் மகள்), வினீத் யாதவ் (லாலு யாதவின் மகள் ஹேமா யாதவின் கணவர்), சிவகுமார் யாதவ் (ஹேமா யாதவின் மாமனார்) ஆகியோருக்குச் சொந்தமான ரூ.6.02 கோடி மதிப்புள்ள 6 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
மேலும் 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் ஆட்சியில் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்ததாக கூறப்பட்டது. நிலங்களுக்குப் பதிலாக ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பான மோசடியில் லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு லட்சம் சதுர அடிக்கும் அதிகமான நிலத்தை வெறும் 26 லட்சம் ரூபாய்க்கு கையகப்படுத்தியதாக சிபிஐ தெரிவித்து இருந்தது.