திமுகவை சமாதானப்படுத்தவே காவிரி நீர் திறப்பு; காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் கர்நாடகா எதிர்க்கட்சிகள்!!
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விட்டு இருப்பது தொடர்பாக கர்நாடகா அரசியலில் பூகம்பம் கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி காவிரி நீரை பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் வலியுறுத்தி இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறந்து விடுவதாக கர்நாடகா அரசும் ஒப்புக்கொண்டது. இதற்கு ஹெச் டி குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் குமாரசாமி, ''கர்நாடகா மாநிலத்தின் காவிரி ஆற்றுப்படுகை விவசாயிகளின் நலனை பலி கொடுத்து, இந்தியா கூட்டணியை வளர்ப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டின் ஆளும்கட்சியான திமுக உள்ளது. அதனால் அவர்களுக்கு சாதகமாக காங்கிரஸ் செயல்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு இருக்கும் முடிவு என்பது கர்நாடகா விவசாயிகளுக்கு, கன்னட மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். இந்தியா கூட்டணிக்காக மாநிலத்தின் நலனை ஆளும் காங்கிரஸ் கட்சி தியாகம் செய்துள்ளது.
மேகதாட்டு விஷயத்தில் காங்கிரஸ் பெரிய அளவில் பாதயாத்திரை எல்லாம் சென்று இன்று மாநில மக்களுக்கு துரோகம் செய்து முட்டாள்கள் ஆக்கியுள்ளனர். கர்நாடகா மாநிலத்தின் அணைகள் நிறையவில்லை. விவசாயத்திற்கு நீர் இல்லை. பெங்களூர் நகரம் பெரிய அளவில் குடிநீர் பிரச்சனையை சந்தித்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அருகில் இருக்கும் மாநிலத்துக்கு காவிரி நீர் திறந்து விடுகிறார்கள் என்றால், 2024ஆம் ஆண்டு தேர்தலை முன் வைத்து செய்கின்றனர்.
முந்தைய அரசுகளுக்கும் இதுபோன்ற சவால்கள் இருந்துள்ளன. அவற்றை திறம்பட தமிழ்நாட்டுக்கு எதிராக கையாளப்பட்டுள்ளன. ஆனால், தற்போது உச்சநீதிமன்றத்துக்கு திமுக அரசு சென்றவுடன் பயந்து கொண்டு காங்கிரஸ் நீரை திறந்துவிட்டுள்ளது'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஒகேனக்கல்லில் நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை
இதே கருத்தை கர்நாடகா பாஜகவும் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ''திமுகவை காங்கிரஸ் கட்சி சமாதானப்படுத்துகிறது. கர்நாடகா விவசாயிகளின் நலனை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். திமுகவை சமாதானப்படுத்துவதற்கு என்றே காவிரி நீரை திறந்து விட்டுள்ளனர். காவிரிபடுகையில் இருக்கும் பெரும்பாலான மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு பாஜக ஆதரவளிக்கும். கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்படுவது அனுமதிக்க முடியாது''என்று தெரிவித்துள்ளார்.