ஒகேனக்கல்லில் நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்க தடை
கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒகேனக்கல்லில் நீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 136 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் தமிழக, கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்து சேர்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நேற்று பகல் 12 மணி அளவில் 4 ஆயிரம் கன அடிநீர் வந்துகொண்டிருந்த நிலையில், பின்னர் அது 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் நண்பகல் 1 மணிக்கு மேல் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
தேர்தல் வந்தால் தான் எங்கள் ஞாபகம் வருமா? எம்.பி. ஜோதிமணியை வறுத்தெடுத்த வாலிபரால் பரபரப்பு
இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை அது 13 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிரித்துள்ளதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 2வது நாளாக பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசல் பயணம் மேற்கொள்ள ஆர்வமுடன் வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.