The polling for 68 assembly constituencies in Himachal Pradesh will be held tomorrow.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குபதிவு ஒரே கட்டமாக நாளை நடக்கிறது. 

பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் 62 பேர் உள்ளிட்ட 337 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல்

இமாச்சலப்பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதன்படி, மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 9ந்தேதி(இன்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

பிரசாரம் முடிந்தது

கடந்த 12 நாட்களாக மாநிலத்தில் தீவிரமாக நடந்த தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்தது. பா.ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா 3 முறை இமாச்சலப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் தேர்தல் கூட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் ராகுல் காந்தி 3 கூட்டங்களில் பேசி வாக்குகளை சேகரித்தார்.

முதல்வர் வீரபத்ர சிங், 10 அமைச்சர்கள், துணை சபாநாயகர் ஜகத் சிங் நெகி, முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமால், 12-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இந்த தேர்தலில் கடும் போட்டியைச் சந்திக்கின்றனர்.

பா.ஜனதா-காங்.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாரதியஜனதா கட்சியும் 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 42 இடங்களிலும், அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 19 பெண்கள் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் பா.ஜனதா கட்சி சார்பிலும் 7 பேர் காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி புஷ்பேந்திர ராஜ்பூத் நிருபர்களிடம் கூறியதாவது-

50 லட்சம் வாக்காளர்கள்

ஒட்டுமொத்தமாக 50 லட்சத்து 25 ஆயிரத்து 941 வாக்களார்கள் வாக்களிக்க உள்ளனர். மக்கள் வாக்களிக்க 7 ஆயிரத்து 525 வாக்குச்சாவடிகளும், 37 ஆயிரத்து 605 அதிகாரிகள் தேர்தல் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

தேர்தலை கட்டுக்கோப்பாகவும், நியாயமாகவும் நடத்தும் பொருட்டு 17 ஆயிரத்து 850 போலீசார், ஊர்காவல்படையினர், 65 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். 2,307 வாக்குப்பதிவு மையங்களை ஆன்-லைன் மூலம் கண்காணிக்க கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

தணிக்கை சீட்டு எந்திரம்

இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 525 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை சீட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தே ர்தலில் முதல்முறையாக வாக்குப்பதிவு தணிக்கைசீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

மாநிலத்தில் 983 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாகவும், 399 மையங்கள் மிகவும் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.