மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பொருளாதார ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவு சுட்டிக்காட்டுகிறது.
பொருளாதார வல்லுனர்கள் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 முதல் 6.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என கணித்த போதும்கூட, அதனை விட அதிகமாக அளவீட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவு செய்துள்ளது. குறிப்பாக, சிமென்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், எஃகு ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது இந்திய பொருளாதாரத்தின் வலிமையை காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டாம் காலாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி எண்கள், உலகளவில் இத்தகைய சோதனை நேரங்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் மீள்தன்மை மற்றும் வலிமையைக் காட்டுகிறது. அதிக வாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையை விரைவாக ஒழிக்கவும், நமது மக்களுக்கு ‘வாழ்க்கையை எளிதாக்கவும்’ வேகமான வளர்ச்சியை உறுதிசெய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என பதிவிட்டுள்ளார்.
Exit poll results 2023: எந்த மாநிலத்தில் யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முழு விவரம்!
முன்னதாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக நவம்பர் 19ஆம் தேதியன்று 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியது. முதல் முறையாக 4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அடைந்து, குறிப்பிடத்தக்க பொருளாதார அடையாளத்தை இந்தியா தாண்டியுள்ளது. மேலும், 2030 க்குள் 7.3 டிரில்லியன் டாலர்கள் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்தியா அடையும் என கணிக்கப்பட்டுள்ளது