அகமது படேலை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என கணக்குப் போட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக, தற்போது அந்த கணக்கு தப்பாகிப் போனதால் தலைகுனிந்து நிற்கிறது.

குஜராதில் மாநிங்களவைத் தேர்தல் அறிவித்தவுடனேயே, காய் நகர்த்திய பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை வளைத்தது. இதையடுத்து 6 எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவினர். இதனால் அங்கு மிச்சமிருந்த எம்எல்ஏக்களை பாதுகாக்க காங்கிரஸ் கட்சியும் தங்கள் சொந்த எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது அணி மாறி ஓட்டுப்போட்ட  காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர், தாங்கள் பாஜக வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என்பதை நிரூபிக்க தங்களது வாக்குச் சீட்டுக்களை அங்கிருந்து பாஜக தலைவரிடம் காட்டினர்.

இந்த ஓவர் விசுவாசம்தான் பாஜகவுக்கு ஆப்பு வைத்துவிட்டது. இது குறித்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. 

அந்த 2 எம்எல்ஏக்கள் அணி மாறி வாக்களித்தாகவும், தாங்கள் வாக்களித்த வாக்குச் சீட்டை, வெளியில் காண்பித்ததால் அவர்கள் இருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும்  அவர்கள்  கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அமைச்சர்கள் படையே தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டது. ஆனாலும் அசராத தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொண்டது.

ரகசிய வாக்கெடுப்பு நடக்கும்போது, வாக்குச் சீட்டை பாஜக தலைவரிடம் காட்டியது, தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது என கூறி அந்த 2 எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாது என அறிவித்தது.

இதனால் அகமது பட்டேல் அசத்தல் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாய்மையே வெல்லும் என பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் பாஜகவுக்குத்தான் இது பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்முறையாக இப்பிரச்சனையில் சறுக்கியுள்ளார்.

பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த பெருமையுடன் இருந்த அமித்ஷாவுக்கு இது முதல் அடி என்றே கூறலாம்.