உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், இது பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 மக்களவை தொகுதிகளிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. தேர்தல் தோல்வியால் அதிர்ச்சி அடைந்த பாஜக
தலைவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

அண்மையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா அங்கம் வகிக்கும் ஆட்சி அமைத்தது. இதனால் வெற்றிக் களிப்பில் இருந்த
பாரதிய ஜனதா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எளிதாகவே வென்று விடுவோம் என கணக்கு போட்டது. 

ஆனால் 3 மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா பின்தங்கியுள்ளது. இந்த பின்னடைவு பாரதிய ஜனதாவின் அசாத்திய நம்பிக்கைக்கு கிடைத்த அடி என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்தது.

சிவசேன கட்சியின் முத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது,  கோரக்பூர் மற்றும் புல்பூரில் பாரதிய ஜனதாவிற்கு பாதகமாக முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. பாரதிய ஜனதாவிற்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைவது சிறப்பு என்று தாம் கூறவில்லை என்றார். மோடி அலை ஓய்ந்து வருவதையே இது காட்டுகிறது என்றும் கூறினார்.

இடைத்தேர்தல் தோல்வி குறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், உத்திரப்பிரதேச இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி
கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்துள்ளது. பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.