கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட கடற்படை வீரர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் மொட்டை மாடியில் தேங்க்ஸ் என்று எழுதப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள 80 அணைகளும் திறக்கப்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரள மாநிலம் முழுவதுமே மூழ்கியது. கேரளாவின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சுமார் 8000 வீடுகள் இடிந்துள்ளன. 26,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.  8 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 67 ஹெலிகாப்டர்கள், 24 சரக்கு விமானங்கள், 548 மோட்டார் படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. 

மத்திய அரசு கேரளாவிற்கு ரு.600 கோடி நிவாரண நிதியுதவியை அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் கேரளாவிற்கு நிதியுதவி அளித்துள்ளன. மீட்புப்பணிகளும் நிவாரண பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடுகளை விட்டு வெளியேற முடியாத மக்கள், வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சமடைந்தனர். அப்படி தஞ்சமடைந்தவர்களும் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் சிக்கித்தவித்த இரண்டு பெண்களை மீட்ட அதிகாரிகளுக்கு வீட்டின் மொட்டை மாடியில் நன்றி தெரிவிக்கும் விதமாக தேங்க்ஸ் என எழுதியுள்ளனர். அந்த நன்றியை கண்டு கடற்படை வீரர்களும் அதிகாரிகளும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அந்த புகைப்படத்தை கடற்படை செய்தித்தொடர்பாளர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.