ஆர்.எஸ்.எஸ். தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே, சுற்றுச்சூழல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் சூரியனை வழிபட வேண்டும் என்றும், இந்து மதமே மேலானது என்றும் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்து, மதச்சார்பின்மை குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

இந்து மதம் ஒரு உன்னதமான மதம் என்றும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக நதிகளையும் சூரியனையும் வழிபட வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் சந்த் கபீர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

"சூரிய நமஸ்காரம் செய்வதால் தீங்கு இல்லை"

முஸ்லிம்கள் இந்து கலாச்சாரப் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்வது குறித்து ஹோசபலே விரிவாகப் பேசினார்:

"நமது முஸ்லிம் சகோதரர்கள் சூரிய நமஸ்காரம் செய்வதால் அவர்களுக்கு என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? சூரிய நமஸ்காரம் செய்வதால் அவர்கள் மசூதிக்குச் செல்வது தடுக்கப்படும் என்று அர்த்தமல்ல." என்று அவர் தெரிவித்தார்.

சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணயாமம் ஆகியவை உடல்நலம் சார்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான நடைமுறைகள் எனக் கூறிய அவர், "இதைச் செய்வதற்காக நீங்கள் நமாஸ் செய்வதைக் கைவிட வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம்," என அவர் குறிப்பிட்டார்.

"இந்து மதமே மேலானது"

மக்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், ஆனால் அவர்கள் 'மனித மதத்திற்கு' முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்து தத்துவத்தின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "நமது இந்து மதம் மேலானது. இது அனைவருக்காகவும் பேசுகிறது. அனைத்து உயிரினங்கள் மற்றும் இயற்கையின் மீதான அகிம்சையை இது போதிக்கிறது," என்றார்.

மேலும், இந்தியப் பிரிவினையின்போது இந்துக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அனைவரும் அறிவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ராகுல் காந்தியின் விமர்சனம்

சமீபத்தில், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் (Preamble) உள்ள 'மதச்சார்பற்ற' (Secular) மற்றும் 'சமதர்மம்' (Socialist) ஆகிய வார்த்தைகளைத் தக்கவைப்பது குறித்து விவாதம் தேவை என ஹோசபலே கோரிக்கை விடுத்திருந்தார். நெருக்கடி நிலை காலத்தில் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டதாகவும், அவை அசல் அரசியலமைப்பில் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அதில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகமூடி மீண்டும் ஒருமுறை கழன்று விழுந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் நீதியைப் பற்றிப் பேசுவதால் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க விரும்புவது மனுஸ்மிருதியைத் தான்." எனக் கூறினார்.