நாடு முழுவதும் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பிரான்சின் நீஸ் நகரில் நடத்தியது போன்று கனரக வாகனங்களைப் பயன்படுத்தி, மக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. தீவிரவாதிகள் நடமாட்டம் ஊடுறுவுல்கள் உள்ளதா என்பது குறித்து உளவுத்துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதில் பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலை போன்று டெல்லியிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நடவடிக்கையினால் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் குடியரசு தின விழாவில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளன என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளதாக மெயில் டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பா, இந்தியன் முஜாகிதீன் மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என்றும் எச்சரிக்கை செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வாகனம் ஏற்றப்பட்டது. இதுபோன்று இந்தியாவிலும் வாகனங்களை கொண்டு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தகவலானது பாதுகாப்பு முகமைகளுடன் பகிரப்பட்டு உள்ளது, கனரக வாகனங்களின் நகர்வை தீவிரமாக கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. குடியரசு தினவிழாவிற்கு முன்னதாக இரு நாட்கள் கனரக வாகனங்கள் நுழைவிற்கு தடை விதிக்கவும் பாதுகாப்பு முகமைகள் திட்டமிட்டு உள்ளன என தகவல்கள் தெரிவித்து உள்ளன.