பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளத்தாக்கில் இருந்ததாக NIA கண்டுபிடித்துள்ளது. பைசரன், கேளிக்கை பூங்கா, பேதாப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்கள் இலக்காக இருந்தன. ரகசிய தொடர்பு சாதனம் பயன்படுத்தப்பட்டது.

பஹல்காம் தாக்குதல்- தீவிரவாதிகளின் திட்டம்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பறித்தது. இந்தநிலையில் பயங்கரவாதிகளின் பஹல்காம் தாக்குதல் குறித்த விசாரணையில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த படுகொலையில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதக் குழு தாக்குதலுக்குக் குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பே பைசரன் பள்ளத்தாக்கில் இருந்ததாக NIA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 20 அன்று பயங்கரவாதிகள் பஹல்காமிற்குள் நுழைந்து அப்பகுதியில் விரிவான கண்காணிப்பை மேற்கொண்டனர் என்பது கைது செய்யப்பட்ட ஓவர் கிரவுண்ட் வொர்க்கர்கள் (OGW) விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நீண்ட காலமாக இருந்ததற்கான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன் பஹல்காமை அடைந்த பயங்கரவாதிகள்

பைசரன் மட்டுமல்ல, மேலும் இந்த 3 இடங்களும் பயங்கரவாதிகளின் இலக்கில் இருந்தன. பைசரன் புல்வெளிகளுக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கு, கேளிக்கை பூங்கா மற்றும் பேதாப் பள்ளத்தாக்கு போன்ற மூன்று பிரபலமான சுற்றுலாத் தலங்களையும் பயங்கரவாதிகள் தேர்வு செய்தனர்.

உயர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பயங்கரவாதிகள் ஏப்ரல் 15 அன்று பஹல்காமை அடைந்து, அழகிய பைசரன் பள்ளத்தாக்கு உட்பட சுற்றியுள்ள குறைந்தது நான்கு இடங்களைக் கண்காணித்தனர். அரு பள்ளத்தாக்கு, உள்ளூர் கேளிக்கை பூங்கா மற்றும் பேதாப் பள்ளத்தாக்கு ஆகியவை அடங்கும். ஆனால் இந்தப் பகுதிகளில் அதிக பாதுகாப்புப் படையினர் இருந்ததால், பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தும் முடிவிலிருந்து பின்வாங்கினர்.

விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், பயங்கரவாதிகளுக்கு உதவிய சுமார் 20 OGWகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, நான்கு OGWகள் தாக்குதல் நடத்தும் இடங்களை அடையாளம் காண பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தீவிரமாக உதவியதாக NIA வட்டாரங்கள் நம்புகின்றன.

ரகசிய தொடர்பு சாதனம் பயன்பாடு

தாக்குதலின் போது, பயங்கரவாதிகள் ஒரு சிறப்பு தொடர்பு சாதனத்தைப் பயன்படுத்தினர். இது "அல்ட்ரா-ஸ்டேட்" தொடர்பு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சிம் கார்டு இல்லாமல் தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த சாதனம் சிக்னலைக் கண்டறிவது கடினமாக இருக்கும் குறுகிய தூர, பாதுகாப்பான இணைப்பை வழங்குகிறது. தாக்குதலின் போது இந்த சாதனத்திலிருந்து இரண்டு சிக்னல்கள் கண்டறியப்பட்டன.

தற்போது, 2,500 சந்தேக நபர்களில் 186 பேர் காவலில் உள்ளனர் மற்றும் விசாரணை தொடர்கிறது. பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் உள்ளனர் மற்றும் முகமைகள் உள்ளூர் ஆதரவு வலையமீது கவனம் செலுத்தி வருகின்றன, இது எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு பஹல்காம் படுகொலையைச் செயல்படுத்த உதவியது.

பாகிஸ்தான் ராணுவத்தின் ஆயுதங்களைப் பயன்படுத்தும் பயங்கரவாதிகள்

இந்தியாவில் செயல்படும் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் தந்திரோபாய உபகரணங்கள் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரில் வளர்ந்து வரும் பிராந்திய அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவமும் ISIயும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதாக கூறப்படுகிறது.