இப்போதே சிறைகள் தயார்..! நெருங்குகிறது அயோத்தி தீர்ப்பு நாள்..! 

சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி, பாபர் மசூதி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. இதனை தொடர்ந்து எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 144 தடை உத்தரவு போடப்பட்டு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அங்குள்ள அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் பல கல்லூரிகளில் எட்டு தற்காலிக சிறைகளும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தேச பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயலும் பலரை முன்கூட்டியே கைது செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மாநில நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் என பல துறை அதிகாரிகள் முகாமிட்டு நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உத்திரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் போலீசார் மற்றும் நிர்வாக அலுவலர்களை வரும் 30ஆம் தேதி வரையில் விடுமுறை எடுக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கூடுதலாக 4000 மத்திய பாதுகாப்பு படையினரையும், அயோத்திக்கு அனுப்பியுள்ளது. இது தவிர்த்து அயோத்தி தொடர்பாக தீர்ப்பு வழங்க உள்ள 5 நீதிபதிகளில் ஒருவரான அசோக் பூஷன் உள்ள வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது ராம் ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ராமர் கோவில் பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பிற மாநிலங்களும் சட்டம் ஒழுங்கைப் பேணி காக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்கும் ஒரு மிக முக்கிய தீர்ப்பாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.