Tomato : தக்காளி விற்பனை மூலம் ஒரே மாதத்தில் ரூ.1.8 கோடி சம்பாதித்த விவசாயி..!
விவசாயி ஒருவர் தக்காளி விற்பனை மூலம் ரூ.1.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ள சம்பவம் அனைவரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஆந்திராவில் ஓரளவிற்கு தக்காளி விளைச்சல் உள்ள நிலையில் பல்வேறு வட மாநில வியாபாரிகளும், ஆந்திராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்ய துவங்கியுள்ளனர். இதனால், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தக்காளி, வட மாநிலங்களுக்கு செல்கிறது.
இதனால் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, மலிவு விலையில் ரேஷன் கடைகள், தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகத்துறை வாயிலாக தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளை மண்டலை சேர்ந்த விவசாயி ஒருவர் தக்காளி விற்பனை மூலம் ரூ.1.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார். 37 வயதான பன்சவாடா மகிபால் ரெட்டி என்ற விவசாயி 8 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டுள்ளார், இதுவரை 7,000 பெட்டிகளுக்கு மேல் தக்காளியை விற்பனை செய்துள்ளார்.
ஒவ்வொரு பெட்டியையும் சராசரியாக 2,600 ரூபாய்க்கு விற்றார்.மகிபால் ரெட்டி கடந்த 20 ஆண்டுகளாக 40 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். அவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் மீதமுள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார் என்று Tv9 தெலுங்கு செய்தி வெளியிட்டுள்ளது.
10ம் வகுப்பில் தோல்வியடைந்ததால் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். விவசாயி ஏப்ரல் மாதத்தில் தக்காளி விதைகளை விதைத்தார். கோடை காலமானதால் பயிர்கள் வீணாகாமல் இருக்க நிழல் வலையில் தக்காளி சாகுபடி செய்தார்.
ரெட்டியின் தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்தபோது தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது.
தக்காளி பயிரிட ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவாகியதாக மகிபால் ரெட்டி தெரிவித்தார். ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.1க்கும் குறைவாக இருந்ததால், கடந்த காலங்களில் தக்காளியை சாலையில் கொட்டியதை அவர் நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 லட்சம் முதலீடு செய்தால் 10 லட்சம் கிடைக்கும்.. இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்