இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கி உள்ளனர். ஸ்கூட்டர் வெடித்துச் சிதறிய அறையில் ஒடெலு மற்றும் அவரின் குடும்பத்தார் யாரும் இல்லை.
ஐதராபாத் நகரின் கரிம்நகர் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்துச் சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரிம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ராம்சந்திரபூர் கிராமத்தில் ஒடெலு என்ற நபர் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு மாதங்களாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது ஸ்கூட்டரை சார்ஜரில் போட்டு உறங்கி சென்று இருக்கிறார்.
பாதிப்பு:
ஸ்கூட்டருக்கு சில மணி நேரங்கள் சார்ஜ் ஏறிய நிலையில், திடீரென அதன் பேட்டரிகள் வெடித்து சிதறின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஸ்கூட்டர் வெடித்து சிதறிய சம்பவத்தை ஒடெலு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை. எனினும், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமடுகு காவல் நிலையத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்துச் சிதறிய சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.
“இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கி உள்ளனர். ஸ்கூட்டர் வெடித்துச் சிதறிய அறையில் அதிர்ஷ்டவசமாக ஒடெலு மற்றும் அவரின் குடும்பத்தார் யாரும் இல்லை. இதன் காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஸ்கூட்டர் மட்டும் பாழாகிவிட்டது. புகார் பதிவு செய்யப்படவில்லை என்பதால், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்யவில்லை,” என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
உயிரிழப்பு:
முன்னதாக நிசாமாபாத் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று வெடித்து சிதறியதில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். மேலும் அவரின் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலத்த காயமுற்றனர். இந்த சம்பவம் ஏப்ரல் மாத வாக்கில் அரங்கேறியது. குடும்பத்தார் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, கவனக்குறைவு காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தியது போன்ற தகவல்கள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.
இதை அடுத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்த ஷோரூம் டீலர் மற்றும் உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் ஆந்திர பிரதேச மாநிலத்திலும் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. இதில் விஜயவாடாவை சேர்ந்த 40 வயதான கோட்டகொண்டா சிவா குமார் என்ற நபர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்ததால் உயிரிழந்தார். இவர் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் ஏற்றி இருந்த நிலையில், திடீரென அதன் பேட்டரி வெடித்ததில் உயிரிழந்தார்.
