சுதந்திர தின விழாவில் சிறந்த காவலருக்கான விருது வாங்கிய திருப்பதி என்பவர், மறுநாளே லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி ரெட்டி. மெஹபூப் நகர் ஐ டவுன் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுகிறார். சுதந்திர தினத்தன்று சிறந்த காவலருக்கான விருதை அமைச்சரின் கைகளில் பெற்ற இவர் அடுத்த நாளே லஞ்ச வழக்கில் கையும் களவுமாகச் சிக்கியுள்ளார். இவர், மணல் வியாபாரி ரமேஷ் என்பவரிடம் மணல் அள்ளுவதற்கு லஞ்சமாக 17 ஆயிரம் கேட்டு நேற்று முன்தினம் மிரட்டினாராம். இதற்கு ரமேஷ் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தபோது, பொய் வழக்கு போடுவேன் என்று கூறி மீண்டும் மிரட்டினாராம். இதனால் மனவேதனையடைந்த ரமேஷ்,லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு புகார் அளித்தார். 

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறிய அறிவுரையின்பேரில் காவல் நிலையம் வெளியே ரமேஷ்,  காவலர் திருப்பதி ரெட்டியிடம் நேற்று முன்தினம் 17 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கினார். இதை பெற்ற காவலர் திருப்பதி ரெட்டியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சிறந்த தாசில்தாராக தேர்வான அதிகாரி வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.93 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 400 கிராம் நகைகளைப் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.