கேசிஆரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த்!
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அம்மாநில முதல்வர் ரேவந்த் நலம் விசாரித்துள்ளார்
தெலங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் தெலங்கானாவின் ஜாம்பவான் கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
முன்னதாக தேர்தல் முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியானதையடுத்து, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள எர்ரவல்லியில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு கேசிஆர் சேன்றார். தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதியன்று தனது பண்ணை வீட்டில் திடீரென கேசிஆர் கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பில் முறிவு ஏற்பட்டது.
உடனடியாக, ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்தனர். இதையடுத்து, அவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் குணமடைய 8 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நலம் விசாரித்தார். அவரது உடல்நிலை குறித்து அவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும், மருத்துவர்களிடமும் அவர் கேட்டறிந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, கே.சி.ஆரின் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
“விரைவாக குணமடையுமாறும், தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்குமாறும் கேசிஆரை கேட்டுக் கொண்டேன். மக்களுக்கு நல்லாட்சி வழங்க அவரது ஆலோசனை தேவை.” என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.