தெலங்கானாவில் அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். 

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து தேவரகொண்டாவிற்கு இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மொத்தம் 23 பேர் ஒரு வேனில் நேற்று புறப்பட்டனர். ஐதராபாத் - நாகார்ஜூனா சாகர் நெடுஞ்சாலை கொண்டமல்லே பல்லி மண்டலம், சென்னாறம் அருகே சென்றபோது திடீரென வேன் டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய வேன் எதிர் திசையில் ஐதராபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேன் மோதி பின்பு சாலையோர மரத்தில் மோதி நின்றது. 

இதில் வேனில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

மேலும் இறந்த 7 பேர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.