இந்திய வரலாற்றில் முதல்முறையாக தேஜஸ் விரைவு ரயில் 3 மணி நேரம் தாமதமானதால், 950 பயணிகளுக்கு ஐஆர்சிடிசி ரூ. 1.62 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளது.

டெல்லி-லக்னோ இடையே தேஜஸ் ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது ஐ.ஆர்.சி.டி.சி.யின் கீழ் இயங்கும், முழுக்க முழுக்க தனியார் மயமாக்கப்பட்ட முதல் ரயில் இதுவாகும். இந்த ரயில் தாமதமாக வந்தால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலாக் கழகம் எனப்படும் (ஐஆா்சிடிசி) கடந்த 1-ம் தேதி அறிவித்து இருந்தது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இந்த ரயில் தாமதமாக வந்துள்ளது. லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக காலை 9.55 மணிக்கு புறப்பட்டு டெல்லிக்கு மாலை 3.40 மணிக்கு சென்றது. தொடர்ந்து, டெல்லியில் இருந்து லக்னோவுக்கு பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மாலை 5.30 மணிக்கே புறப்பட்டது. இதனால், இரவு 10.05 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கே ரயில் வந்து சேர்ந்தது. இதனால், லக்னோவில் இருந்து டெல்லிக்குப் பயணித்த 450 பயணிகளுக்கு தலா ரூ. 250 இழப்பீடாகவும், டெல்லியில் இருந்து லக்னோவுக்குப் பயணித்த 500 பயணிகளுக்கு தலா ரூ. 100 இழப்பீடாகவும் வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

இந்த இழப்பீட்டை அனைத்து ரயில் பயணச்சீட்டிலும் வழங்கப்பட்டுள்ள காப்பீட்டு இணைப்பு மூலம் பயணிகள் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 19-ம் தேதி கான்பூரில் ரயில் தடம்புரண்டதுவே இந்த தாமத்தத்துக்கான காரணம் என்றும் கூறியுள்ளனர்.