Asianet News TamilAsianet News Tamil

மணிப்பூர் செல்லும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள்!

இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் கலவரம் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Team of INDIA alliance MPs to visit Manipur on July 29 and 30
Author
First Published Jul 27, 2023, 2:30 PM IST

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர்.

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்த தவறிய அம்மாநில முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர் ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அம்மாநிலத்க்தில் வன்முறை ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் கலவரம் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழு மணிப்பூர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவை 2024 தேர்தல் வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. சுமார் 26 கட்சிகளை கொண்ட அந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்துக்கு இதற்கு முன்பு அமித் ஷா சென்றார். அப்போது அமைதி திரும்ப அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜூன் மாதம் மணிப்பூர் சென்று திரும்பினார். இந்த நிலையில், இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களின் குழு மணிப்பூர் செல்லவுள்ளது.

இங்க பேச மாட்டாரு; ஆனா அங்க பேசுவாரு: மோடியை விளாசிய கார்கே!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரதானமாக கையில் எடுத்துள்ளன.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும்  என வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளன.

ஆனால், குறுகிய கால விவாதம் நடத்த தயராக இருப்பதாக ஆளும் பாஜக அரசு கூறி வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் எனவும் பாஜக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன. இதனால், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகிறது. மேலும், பிரதமர் மோயை அவைக்கு வரவழைத்து பேச வைக்கும் பொருட்டு, அரசுக்கு எதிராக நம்பில்லை இல்லாத் தீர்மானத்தையும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன. இதற்கு மக்களவை சபாநாகர் ஒப்புதலும் அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios