குஜராத் மாநிலத்தில் பைனான்சியர் ஒருவருடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்‍கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்‍கப்பணம், தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் சிக்‍கின.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசிக்‍கும் Kishore Bhaijyawala என்பவர், Finance தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு அவர் டீக்‍கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய வீடு மற்றும் கட்டடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்‍கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்‍கப்பணம், தங்க நகைகள், விலை உயர்ந்த ஆபரணக்‍ கற்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை சிக்‍கின.

இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தையல்காரர் ஒருவருக்‍கு சொந்தமான தையல் கடைகள், மொஹாலி மற்றும் சண்டிகரில் உள்ளன. மொஹாலியில் உள்ள தையல் கடையில், சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்‍கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அமலாக்‍கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளும் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டது. மேலும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டு வாபஸ் பெற்ற பின்னர் கடையின் உரிமையாளர்கள் இரண்டரை கி​லோ தங்கம் வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.