மக்களவையில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்த விவாதத்தின் போது, பிரதமர் மோடி தொடர்ந்து நேருவின் பெயரைக் குறிப்பிடுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் புள்ளிவிவரங்களுடன் விமர்சித்தார்.
மக்களவையில் "வந்தே மாதரம்" பாடல் குறித்து நடைபெற்ற விவாதத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் உரையை எதிர்த்துப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய், பிரதமர் எப்போது பேசினாலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரைக் குறிப்பிடுவதாகக் கூறி விமர்சித்தார்.
மேலும், வந்தே மாதரம் பாடலுக்கு முக்கியத்துவம் அளித்து அதைத் தேசியப் பாடலாக மாற்றியது காங்கிரஸ் கட்சிதான் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"வந்தே மாதரத்தை காங்கிரஸ் ஆதரித்தது. அதை இந்தியாவின் தேசியப் பாடலாக மாற்றுவதற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்தது. பிரதமர் மோடி ஒவ்வொரு விவாதத்திலும் நேருஜியின் பெயரையும், காங்கிரஸின் பெயரையும் எடுக்கிறார்," என்று கோகாய் குறிப்பிட்டார்.
புள்ளிவிவரங்களை அடுக்கிய கோகாய்
கவுரவ் கோகாய் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுப் பேசியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. "ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்போது – பண்டிட் நேருஜியின் பெயர் 14 முறையும், காங்கிரஸின் பெயர் 50 முறையும்; அரசியலமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு விவாதத்தின்போது – நேருஜியின் பெயர் 10 முறையும், காங்கிரஸின் பெயர் 26 முறையும்; 2022 குடியரசுத் தலைவர் உரையில் – நேருஜியின் பெயர் 15 முறையும்; 2020 குடியரசுத் தலைவர் உரையில் – நேருஜியின் பெயர் 20 முறையும் இடம்பெற்றது" என்று கோகாய் பட்டியலிட்டார்.
"நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்த அமைப்புக்கும் நான் மிகவும் பணிவுடன் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முயன்றாலும் – பண்டிட் நேருஜியின் பங்களிப்புகளில் ஒரு கறுப்புப் புள்ளியைக் கூட உங்களால் வைக்க முடியாது," என்று கௌரவ் கோகாய் ஆவேசமாகக் கூறினார்.
மக்கள் துயரங்கள் பற்றிப் பேச மறுக்கும் மோடி
தேசத்தின் தற்போதைய முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பிரதமர் மௌனம் காப்பதாகவும் கோகாய் குற்றம் சாட்டினார்.
"இந்திய மக்கள் அவதிப்படுகிறார்கள், அதைப் பற்றி எந்தக் குறிப்பும் அவரது பேச்சில் இல்லை. டெல்லி குண்டுவெடிப்பு பற்றிப் பிரதமர் மோடி ஒருமுறைகூடக் குறிப்பிடவில்லை. டெல்லியிலோ அல்லது பஹல்காமிலோ உள்ள குடிமக்களை பாதுகாக்க முடியவில்லை. மக்கள் சுவாசிக்க முடியாமல் தவிக்கிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
'வந்தே மாதரம்' பற்றி பிரதமர் மோடி
முன்னதாக, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் ஆறாவது நாளில் நடைபெற்ற இந்த விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, 'வந்தே மாதரம்' பாடலை "சக்திவாய்ந்த மந்திரம்" என்றும், இந்தியாவின் சுதந்திர இயக்கத்தை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்த முழக்கம் என்றும் போற்றினார். இதன் பெருமையை எதிர்காலத் தலைமுறையினருக்காக மீட்டெடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி 1905-ல் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் அரசியலை நினைவுகூர்ந்தார். அவர்கள் வங்காளத்தைப் பிரித்தபோது, "வந்தே மாதரம் ஒரு பாறை போல உறுதியாக நின்றது" என்று அவர் வலியுறுத்தினார்.

