மத்திய அமைச்சராகும் தெலுங்கு தேசம் கட்சி கோடீஸ்வர எம்.பி.! ரெண்டு பேரை ஓகே செய்த சந்திரபாபு நாயுடு!
ராம்மோகன் நாயுடுவுக்கு அமைச்சர் பதவியும், டாக்டர் சந்திரசேகருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்படுவதை தெலுங்கு தேசம் கட்சி உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி தலைமையில் அமையவுள்ள புதிய மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு இடம் கிடைப்பது உறுதி என்று தகவல் வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடி இன்று மாலை 3வது முறையாக பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். அவருடன் அமைச்சரவையில் இடம்பெறும் முக்கியத் தலைவர்களும் பதவியேற்க உள்ளார்கள். பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதால் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
குறிப்பாக, ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியும் பீகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அக்கட்சிகளின் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உருவாக்கியுள்ளார். பாஜகவின் கூட்டணி ஆட்சியில் இவர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள இரண்டு பேர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. டாக்டர் சந்திரசேகர் மற்றும் ராம் மோகன் நாயுடு இருவரும் மத்திய அமைச்சரவைக்குத் தேர்வாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ராம்மோகன் நாயுடுவுக்கு அமைச்சர் பதவியும், டாக்டர் சந்திரசேகருக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்படுவதை தெலுங்கு தேசம் கட்சி உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 36 வயதாகும் ராம்மோகன் நாயுடு ஶ்ரீகாகுளம் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வென்றுள்ளார்.
முதல் முறை மக்களவைத் தேர்தலில் களம் கண்ட டாக்டர் பி. சந்திரசேகர் குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். பி. சந்திரசேகர் கோடீஸ்வர எம்.பி.க்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.5,785 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
2 கேபினெட் அமைச்சர்கள், 2 இணை அமைச்சர்கள் என தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இருவர் தவிர மற்றவர்கள் பற்றிய விவரம் வெளியாகவில்லை. இத்துடன் மக்களவை துணை சபாநாயகர் பதவியும் டி.டி.பி.க்குக் கிடைக்கும் எனத் தெரிகிறது.
5,785 கோடி சொத்து... நாட்டின் நம்பர் 1 பணக்கார வேட்பாளர்! இவர் யாருன்னு தெரியுமா?