ஹிஜாப் சர்ச்சையை எதிர்கொள்ளும் தப்சும் ஷேக்.. 12-ம் வகுப்பு மனிதநேய பாடத்தில் முதலிடம்..
உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பியூசி கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு கர்நாடக அரசு, PUC கல்லூரி சீருடை விதியை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பியூசி கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அந்த 6 மாணவிகளில் தப்சும் ஷேக்கும் ஒருவர். தப்சும் ஷேக், அரசின் இந்த விதியை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில் 18 வயதான தப்சும் ஷேக், 12ஆம் வகுப்பு PUC தேர்வில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
கர்நாடக மாநில கல்வி வாரியத்தின் மனிதநேய பாடத்தில் முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிகாலை 4 முதல் 8 மணி வரை படிப்பதற்கு சிறந்த நேரம் என்று தெரிவித்துள்ளார். மேலும் "அந்த நேரத்தில் என் மனம் புத்துணர்ச்சியுடனும் சுதந்திரமாகவும் இருக்கிறது, ஒருவர் படிக்க இதுவே சிறந்த நேரம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு அதிக ஆற்றல் இருந்தபோது நான் மிகவும் கடினமான அத்தியாயங்களைப் படித்தேன்.
இதையும் படிங்க : தமிழ்தாய் வாழ்த்தை அவமதிப்பதா?மேடை நாகரிகம் கூட இல்லை!பாஜக நிர்வாகி ஈஸ்வரப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்
ஹிஜாப் விவகாரத்தில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தும்படி எனது பெற்றோர் எனக்கு ஆலோசனை வழங்கினர். அதன்படி நான் படித்தேன். நான் தூங்கிக்கொண்டிருந்த போது மனிதநேயப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்ததைப் பற்றிய செய்தியை வெளியிடுவதற்காக என் பேராசிரியர் என்னை அழைத்தார். அந்த செய்தியால் என் பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்," என்று கூறினார்.
5 வயதிலிருந்தே ஹிஜாப் அணிந்திருப்பதாக தப்சும் கூறினார். மேலும் "இது எனது அடையாளத்தின் ஒரு பகுதியாகும், இந்த சர்ச்சையால் நான் மிகவும் சோகமாகவும் கலக்கமாகவும் இருந்தேன். ஹிஜாப் அணிய தடை விதிப்பது முஸ்லிம்களை பின்தங்கிய மற்றும் கல்வியில் இருந்து விலக்கி வைக்கும் ஒரு சூழ்ச்சியாகும், அது சரியல்ல என்று என் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர். முஸ்லிம் பெண்கள் மீது யாரும் ஹிஜாப் அணிவதை திணிப்பதில்லை. நான் அதைப் பற்றி என் பெற்றோரிடம் கேள்விகளைக் கேட்டேன், என் பதில்களைப் பெற்ற பிறகுதான் நான் அதை எடுத்துக் கொண்டேன்..” என்று தெரிவித்தார்.
மருத்துவ உளவியலாளராக விரும்பும் தப்சும் ஷேக், தனது முறையான சுய படிப்பு மற்றும் கல்லூரியில் இருந்த நல்ல ஆசிரியர்கள் காரணமாக தேர்வில் முதலிடம் பிடித்ததாக கூறுகிறார். மேலும் “ கல்லூரி எங்களுக்கு சுய படிப்புக்காக ஒரு மாத கால விடுமுறை அளித்தது. இந்த நேரத்தில், எங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் எங்கள் ஆசிரியர்களை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால் ஹிஜாப் சர்ச்சையால் நான் மிகவும் சோகமாக இருந்தேன். அது அநியாயம் என்று நினைத்தேன். இரண்டு வாரங்கள் கல்லூரியைத் தவறவிட்டேன்; நான் மனச்சோர்வுடனும் குழப்பத்துடனும் இருந்தேன். என்ன செய்வது என்று யோசித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் என்ற பெயரில் கல்வியை கைவிட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக படிப்பை முடிக்குமாறும் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில், எனது கல்லூரியின் நூலகத்திற்குச் சென்று முந்தைய அனைத்து வினாத்தாள்களையும் படித்தேன். இவற்றில் இருந்து மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கேள்விகளைக் கழித்துவிட்டு, கட்டாயம் படிக்க வேண்டிய கேள்விகளின் பட்டியலைத் தொகுத்து படித்தேன்..” என்று கூறியுள்ளார்.
தற்போது, பெங்களூரில் உள்ள ஆர்.வி.பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர தப்சும் ஷேக் திட்டமிட்டுள்ளார். தான் அனிமேஷன் படங்களை விரும்புவதாக கூறும் அவர், தன் தேர்வுக்காக கடினமாக படித்த பிறகு ஓய்வெடுக்கவும் புத்துணர்ச்சி பெறவும் அனிமேஷன் படங்களை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பல புத்தகங்களைப் படிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், மனதில் இருப்பதைப் பேசுவது மிகவும் முக்கியம் என்று தப்சும் ஷேக் தெரிவித்தார். “நான் என் மனதில் இருப்பதை சொல்ல விரும்புகிறேன். மனதில் உள்ள எந்த எண்ணத்தையும் தெரிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு நெருக்கடி; என்ன காரணம்?