ஏற்றமதியில் தமிழ்நாடு நம்பர் 1! நிதி ஆயோக் தரவரிசையில் குஜராத், மகாராஷ்டிரா ஓரங்கட்டி சாதனை!
நிதி ஆயோக் வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான நிதி ஆயோக் வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலை குறியீடு என்ற தரவரிசை பட்டியலில், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை பின்தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் நிதி ஆயோக் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2020 மறுறம் 2021ஆம் ஆண்டுகளில் குஜராத் மாநிலம் தான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இதனை அடுத்து மூன்றாவது ஆண்டாக 2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டிருக்கிறது.
இந்த பட்டியலில் 80.89 புள்ளிகளைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு முதல் இடத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. 78.20 புள்ளிகளைப் வசப்படுத்திய மகாராஷ்டிர மாநிலம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கர்நாடகா 76.36 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தைப் பெற்றவந்த குஜராத் மாநிலம் 73.22 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பின்தங்கிவிட்டது.
ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியலில் கடலோர மாநிலங்கள், மலைப்பகுதி மாநிலங்கள், நில எல்லை மாநிலங்கள் போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவுகளில் கடலோர மாநிலங்கள் பிரிவில் உள்ள மாநிலங்கள் தான் ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் அதிக புள்ளிகளை ஈட்டியுள்ளன. இந்தப் பிரிவிலும் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.
நடுவானில் சூடான பயணியின் மொபைல் போன்! அவசரமாக திரும்பிச் சென்ற ஏர் இந்தியா விமானம்!
ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல் (EPI) என்றால் என்ன?
ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியல் (Export Preparedness Index) என்பதற்கு நிதி ஆயோக் ஒரு வரையறையைக் கூறுகிறது. ஏற்றுமதி தொடர்பான மாநிலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பது, அரசின் ஏற்றுமதி கொள்கைகளை மேம்படுத்துவது மற்றும் வசதியான கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களின் ஏற்றுமதி தயார்நிலை மதிப்பிடு செய்யப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் விளக்கம் அளித்துள்ளது.
குறிப்பிட்ட மாநிலம் ஏற்றுமதி செய்வதற்கு எந்த அளவுக்கு சாதகமான சூழலைக் கொண்டிருக்கிறது என்பதைக் இந்த ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு உணர்த்துகிறது.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
ஏற்றுமதி தயார்நிலைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது பற்றி தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "2022ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. வணிகம் செய்வதற்கு சாதகமான சூழல் கொண்ட முதல் மாநிலமான தமிழகத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. தமிழ்நாடு நீண்ட காலமாக ஆட்டோமொபைல், தோல் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. மேலும் சமீபத்தில் எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதியிலும் நம்பர் 1 ஆக மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் தொழில்துறைக்கு வலுவான சூழலை உருவாக்குவதற்காக தொடர்ச்சியாக முயற்சி எடுத்துவருவதன் விளைவுதான் இது என்றும் இது தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாறுவதற்கான உறுதியைக் கூட்டுகிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.