சிறார் சீர்திருத்த இல்லங்களில் வசிக்கும் குழந்தைகள்: தமிழ்நாடு முதலிடம்!
சிறார் சீர்திருத்த இல்லங்களில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் தொடர்பாக கேள்விக்கு ராஜ்யசபாவில் பதிலளித்துள்ள மத்திய அரசு, சிறார் இல்லங்களில் அரசின் திட்டத்தின் கீழ் 57 ஆயிரம் குழந்தைகள் வசித்து வருவதாக தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் 57,000 குழந்தைகள் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் வசித்து வருவதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக தமிழ்நாட்டில் சிறார் சீர்த்திருத்த இல்லங்கள் அல்லது குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் 7,785 சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, மேற்குவங்க மாநிலத்தில் 6,220 குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் வசித்து வருவதாகவும், ஒடிசாவில் 4,153, மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,654, உத்தரப் பிரதேசத்தில் 3,238, கர்நாடகாவில் 3,182, ராஜஸ்தானில் 2,560, பீகார் மாநிலத்தில் 2,088 சிறார்கள் இல்லங்களில் வசித்து வருவதாகவும் மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு தடை கோரும் பாஜக எம்.பி.,!
நடப்பாண்டு 57,940 குழந்தைகள் சிறார் இல்லங்களில் வசிக்கின்றனர். 2021-22ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 76,118 ஆக இருந்தது. 2020-21 ஆம் ஆண்டில் 77,615 குழந்தைகள் சிறார் இல்லங்களில் வசித்து வந்தனர். 2019-20 ஆம் ஆண்டில் 77,765 சிறார்கள் இந்த இல்லங்களில் வசித்து வந்தனர். 2018-19ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 74,683 ஆக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டில் 5,000க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக பாதிவாகியுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2020-21 ஆம் ஆண்டில் 4,521 ஆகவும், 2021-22 இல் 5,106 ஆகவும் இருந்தது. 2022-23 ஆம் ஆண்டில், இதுவரை பதிவுசெய்யப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 5663 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.