லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு தடை கோரும் பாஜக எம்.பி.,!
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக எம்.பி., மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்

லிவிங் டுகெதர், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் முடிக்காமல் இணைந்து வாழ்வதை குறிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற உறவுகள் சகஜமாக இருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அந்த கலாசாரம் மேலோங்கியுள்ளது. லிவிங் டுகெதர் உறவில் பலரும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், லிவிங் டுகெதர் பாணியில் வாழ்வோருக்கிடையே பிரச்னை ஏற்பட்டு, அந்த பிரச்னை கொலையில் முடிவடையும் சம்பவங்களும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங், லிவ்-இன் உறவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ராஜ்யசபாவில் பேசியபோது வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிமுறையாக ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற சட்டத்தை இயற்றுமாறும் அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சரஸ்வஸ்தி வைத்யா எனும் பெண், அவரது லைவ்-இன் பார்ட்னரால் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்த சம்பவத்தை எம்.பி., அஜய் பிரதாப் சிங் தனது பேச்சின் போது சுட்டிக் காட்டினார்.
பெண்களின் கொலைகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய அவர், உலகில் இதுபோன்ற அனைத்து கொலைகளில் 38 சதவீதம் லிவ்-இன் பார்ட்னரால் அரங்கேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
மணிப்பூர் வன்முறை மத மோதல் அல்ல: கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ்!
மத நூல்கள் மற்றும் இந்திய சமூக மரபுகளை மேற்கோள் காட்டி பேசிய அஜய் பிரதாப் சிங் எம்.பி., “இந்தியாவில் திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் ஒரு கலாசார பாரம்பரியமாக கருதப்படுகிறது. எங்கள் மத நூல்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் லிவ்-இன் உறவுகளின் கலாசார கருத்தை அங்கீகரிக்கவில்லை.” எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “விவ்-இன் உறவை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், அதே உச்ச நீதிமன்றம், அத்தகைய உறவுகளை ‘இந்திய சமூகம் நெறிமுறையற்றது என கருதுவதாகவும், ஆனால், அது சட்டவிரோதமானது அல்ல’ என்றும் கூறியுள்ளது. எனவே, லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்றால் நெறிமுறையற்றது என்று நான் நம்புகிறேன். அது சட்ட விரோதமாகவும் அறிவிக்கப்பட வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தை அரசிடம் எடுத்துச் செல்லுமாறும் அவைத் தலைவருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லிவ்-இன் உறவு என்பது வயது வந்த தம்பதியினருக்கு இடையேயான பரஸ்பர ஏற்பு அடிப்படையிலானது. அத்தகைய உறவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். தற்போதைய நூற்றாண்டில் தன்னை மையமாகக் கொண்ட தனிப்பட்ட வாழ்க்கையில், லிவ்-இன் உறவு இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களிடையே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.