மணிப்பூர் வன்முறை மத மோதல் அல்ல: கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ்!
மணிப்பூர் வன்முறை மத மோதல் அல்ல என ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இந்திய கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ் தெரிவித்துள்ளார்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது
மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மாநிலத்தை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் பலரும் சென்று வருகின்றனர்.
ஜி20 பருவநிலை மாநாடு: தமிழில் வணக்கம் சொல்லி பேசிய பிரதமர் மோடி!
அதேசமயம், மணிப்பூர் கலவரம் இந்து, கிறிஸ்தவர்கள் இடையேயான மத மோதல் என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது. மைதேயி சமூகத்தினரில் பெரும்பாலானோர் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள், குகு சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு மத மோதல் நடைபெற்று வருவதாகவும், இன ஒழிப்பு நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், மணிப்பூர் வன்முறை மத மோதல் அல்ல என ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இந்திய கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ் தெரிவித்துள்ளார். மும்பை லத்தீன் சர்ச் ஆர்ச்பிஷப்பாகவும் இருக்கும் கார்டினல் ஓஸ்வால்ட் கிரேசியாஸ் கூறுகையில், “மணிப்பூர் வன்முடை மத மோதல் என்று திசை திருப்பப்படுகிறது. ஆனால் அது மத மோதல் அல்ல; இரண்டு சமுகங்களுக்கு இடையேயான மோதல். மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு பழங்குடி சமூகங்களும் வரலாற்று ரீதியாக ஒருவருக்கொருவர் மிகவும் விரோதமானவர்கள். சில சட்டங்களால் அங்கு வன்முறை வெடித்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. அதேபோல், கோயில்களும் அழிக்கப்பட்டுள்ளன. நிலைமையை மோசமாகும் வகையில் நாம் எதையும் செய்யக் கூடாது. நல்லிணக்கம், அமைதியை மீட்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும். அதற்கு தேவாலயங்கள் முன்வர வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.