ஜி20 பருவநிலை மாநாடு: தமிழில் வணக்கம் சொல்லி பேசிய பிரதமர் மோடி!
ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்

சென்னையில் நடைபெற்று வரும் ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டார். பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
“2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கையும் நாங்கள் நிர்ணயித்துள்ளோம். சர்வதேச சோலார் கூட்டணி, CDRI மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக் குழு உள்ளிட்ட விஷயங்களில் எங்களது கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைக்கிறோம்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, “பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை. இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.
எஸ்.கே.மிஸ்ரா பதவி நீட்டிப்புக்கு அனுமதி: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம்
புலி, சிங்கம், பனிச்சிறுத்தை, சிறுத்தை, ஜாகுவார், பூமா மற்றும் சிறுத்தை உள்ளிட்ட உலகின் ஏழு முக்கிய பெரிய பூனை இனங்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொண்டு International Big Cat Alliance (IBCA) என்ற சர்வதேச கூட்டணியை இந்தியா உருவாக்கியது. இதனை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, “புலிகளை பாதுகாப்பதற்கான திட்டத்தில் நாம் கற்றுக்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு International Big Cat Alliance உருவாக்கப்பட்டது. அந்த திட்டத்தின் விளைவாக, உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. சிங்கம் மற்றும் டால்பின்களை பாதுகாக்கும் திட்டத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்றார்.
வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுக்கும் நோக்கத்துடன், கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் International Big Cat Alliance கூட்டணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆசியாவில் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை உறுதியாகக் கட்டுப்படுத்த உலகளாவிய தலைவர்களின் கூட்டணிக்கு பிரதமர் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலையில் அழைப்பு விடுத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.