Budget 2023: ஒன்றுமே இல்லாத பட்ஜெட்! தொழில் வர்த்தக சபை கடும் அதிருப்தி
மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினர் எதிர்பார்த்தபடி எந்த ஒரு அறிவிப்பு இடம்பெறவில்லை என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினர் எதிர்பார்த்தபடி எந்த ஒரு அறிவிப்பு இடம்பெறவில்லை என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் வளர்ந்த இந்தியாவை உருவாக்க வலிமையான அடித்தளம் அமைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்த பட்ஜெட் பற்றி கருத்து கூறியுள்ள மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் தலைவர் என். ஜெகந்நாதன், தொழில்துறையினர் எதிர்பார்த்த எதுவும் இந்த பட்ஜெட்டில் காணப்படவில்லை என்று கூறியுள்ளார்.
வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பை 5 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் மட்டும் போதாது. தொழில்துறையினருக்கும் வரி விலக்குக்கான எல்லையை ஒரு கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக அதிகரித்திருக்க வேண்டும் என்றும் ஜெகந்நாதன் குறிப்பிட்டுள்ளார்.
“தொழில்துறையிடருக்கு ஜிஎஸ்டி சலுகையும் அறிவிக்கப்படவில்லை. ரூ.9 லட்சம் வரை ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்கு அனுமதி அளித்திருப்பது, விவசாய கடனுக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது ஆகியவை வரவேற்கத்தக்கவை” என்று தெரிவித்தார்.
“பட்ஜெட்டில் நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு எத்தனை விமான நிலையங்கள் என்று குறிப்பிடப்படவில்லை. மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் ரயில்வேக்கு ரூ.2.41 லட்சம் கோடி கிடைத்துள்ளது. மதுரை விமான நிலையம் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வளர்ச்சி குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது” எனவும் ஜெந்நாதன் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள வேளாண் மற்றும் உணவு தொழில் வர்த்தக சபை தலைவர் எஸ். ரெத்தினவேலு கூறுகையில், உயர்கல்வி நிறுவனங்களில் மூன்று செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்க உள்ளதாக அறிவித்ததைப் பாராட்டினார். மேலும் வேளாண் துறையினருக்கு இந்த பட்ஜெட் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், தொழில்துறையினர் எதிர்பார்த்த ஜிஎஸ்டி சலுகைகளை மத்திய பட்ஜெட் புறக்கணித்துவிட்டது என்றும் ரெத்தினவேலு அதிருப்தி தெரிவித்தார்.