கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த தமிழ் பேனர்களை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்தெறிந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் தமிழ் படங்கள் ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்களில் நுழைந்த கன்னட அமைப்பினர் பேனர்களை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்துள்ளனர்.

நேற்று சுதந்திர தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை கொண்டாட்டம் காரணமாக பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகரில் தமிழ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பேனர்களை, கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், கிழித்தெறிந்துள்ளனர். பேனர்களில் இருந்த தமிழ் வாசகங்களை, மட்டும் அவர்கள் தனியாக கிழித்தெறிந்துள்ளனர்.

தமிழ் பேனர்கள் கிழித்தெறியப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, வேற்று மொழி ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.