தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருப்பதற்காக பாஜக மிகுந்த மன உறுதியுடனும் உள்ளடக்கிய தன்மையுடனும் செயல்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சி வரிசையில் முக்கியப் பங்காற்றிவரும் சூழலில், வியாழன் இரவு பீகாரைச் சேர்ந்த என்.டி.ஏ எம்.பி.க்களுடன் உரையாடிய பிரதமர் மோடி பாஜக கூட்டணி வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காக தகுதியற்ற நிதிஷ் குமார் மாநில முதல்வராக பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
“தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக இருப்பதற்காக பாஜக மிகுந்த மன உறுதியுடனும் உள்ளடக்கிய தன்மையுடனும் செயல்பட்டிருக்கிறது. பீகாரிலும் பெருந்தன்மையுடன் பாஜக தியாகங்களைச் செய்தது” என்று பிரதமர் கூறினார் என கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவிக்கிறார்.
2020 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 74 இடங்களை வென்றது. ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களை வென்றிருந்தது. முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரான நிதிஷ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாஜகவைக் கைவிட்டு, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கைகோர்த்து, பீகார் முதல்வராகத் தொடர்ந்தார்.
மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்: ஆக. 31 - செப்.1 இல் நடக்கிறது

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடனான தனது உரையாடலில், மோடி எதிர்க்கட்சி கூட்டணியை சமாளிக்க ஒரு புதிய உத்தியையும் பரிந்துரைத்தார். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதன் பின்னர் ஸ்திரத்தன்மையின் சக்தியாக இருந்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாவதற்கு முன்பு நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவியதாக பிரதமர் மோடி கூறினார். வலிமை குறைந்த சிறிய கூட்டணிக் கட்சிகளும் மாநிலங்களில் முக்கிய பதவிகளை வகிக்க பாஜக ஆதரவு தெரிவித்தது என்று சுட்டிக்காட்டினார்.
2014 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தனது அரசு நிறைவேற்றியுள்ளது என்ற பிரதமர், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தங்கள் தொகுதியில் உள்ள அரசின் வளர்ச்சிப் பணிகளை முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்யவும் என்.டி.ஏ. எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் பீகாரைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களிடம் பேசினர். 2024 லோக்சபா தேர்தலுக்கான ஆளும் கூட்டணியின் வியூகத்தை வடிவமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக என்டிஏ எம்.பி.க்களிடம் மோடி உரையாற்றி வருகிறார்.
உ.பி.யின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 45க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி முதலில் உரையாற்றினார். பின்னர் ஜூலை 31 அன்று தென் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசினார். வெவ்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 11 எம்.பி.க்கள் குழுவுடன் இதுபோன்ற உரையாடலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
