செப்டம்பர் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தூய்மை இயக்கத்தில் மாணவர்களோடு, ஆசிரியர்களும் சேர்ந்து பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும், பள்ளிகளில் நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்த வேண்டும் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்தாவது-

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமூகத்தில் உள்ள மக்களுக்கும், தங்களின் பள்ளிக்கு அருகே இருக்கும் பகுதிகளிலும் தூய்மை குறித்து விழிப்புணர்வு  பிரசாரங்கள் செய்ய வேண்டும்.

மாணவர்களும், ஆசிரியர்களும் தூய்மை குறித்து பேரணி நடத்தலாம், தங்கள் பகுதியில், அருகே இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தூய்மை குறித்த விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்தலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மனித வள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நடந்த காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கூறுகையில், “ மாநில அரசுகளின் கல்வி அமைச்சர்கள், கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் தூய்மை குறித்த விழிப்புணர்வை 2 வாரங்களுக்கு நிகழ்த்த வேண்டும்.

கடந்த ஓர் ஆண்டாக பள்ளிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே உணர்வுடன் இந்த தூய்மை பிரசாரத்திலும் ஈடுபட வேண்டும்’’  எனத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் தாங்கள் செய்த தூய்மை பிரசாரம் குறித்த புகைப்படங்களையும், தூய்மை நடவடிக்கைகள் குறித்த புகைப்படங்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்அடிப்படையில், பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் சுகாதாரம் குறித்த தரநிலைகள் மதிப்பிடப்படும்.பள்ளிகளுக்கு தரவரிசையும் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.